மத்திய மாகாண சபையின் உறுப்பினர் ஆர்.ராஜாராம் மலையக மக்கள் முன்னணியில் வகித்த தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தமை தொடர்பில் (21.07.2018) அன்று இரவு நுவரெலியாவில் கூடிய அரசியல் உயர் பீடம் அதனை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்துள்ளதுடன் அந்த பதவியில் அவர் தொடரலாம் என அறிவித்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை குழுவின் தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் நிதிச் செயலாளரும் மலையக மக்கள் முன்னணியின் கவூன்சில் உறுப்பினருமான சங்கரன் விஜயசந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் மீது கடந்த வாரம் கட்சியின் செயலாளரால் தற்காலிகமாக கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக அனுப்பப்பட்ட கடிதத்தை (21.07.2018) அன்று இரவு நடைபெற்ற கட்சியின் உயர் பீட கூட்டத்தின் பொழுது வாபஸ் பெறுவதாக ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அவர் கட்சியின் தேசிய அமைப்பாளராக தொடர்ந்து செயற்படுவதற்கும் அனுமதி வழங்கியுள்ளது.
மேற்படி விடயம் தொடர்பாக மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கட்சியின் முக்கியஸ்தர்களிடம் வாக்குவாதம் நடைபெற்றமை தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டை விசாரணை செய்த ஐவர் கொண்ட குழு அதனுடைய அறிக்கையை (21.07.2018) அன்று இரவு நடைபெற்ற கட்சியின் உயர் மட்ட குழுவிற்கு சமர்ப்பித்ததை தொடர்ந்து இந்த தீர்மானத்தை கட்சியின் உயர் மட்டம் மேற்கொண்டுள்ளது.
ஏதிர்கால கட்சியின் நன்மை கருதியும் எதிர்கால அரசியல் முன்னெடுப்புகளை சுமுகமான முறையில் கொண்டு செல்வதற்கும் இனிமேல் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாது என்ற உத்தரவாதத்தின் அடிப்படையிலும் இந்த தீர்மானத்தை கட்சியின் உயர் பீடம் மேற்கொண்டுள்ளதாகவும் விசாரணை குழுவின் தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் நிதிச் செயலாளரும் மலையக மக்கள் முன்னணியின் கவூன்சில் உறுப்பினருமான சங்கரன் விஜயசந்திரன் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இறுதியாக நடைபெற்ற மாகாண சபை தேர்தலில் மலையக மக்கள் முன்னணி தனித்து போட்டியிட்டதுடன் அந்த குழுவில் வெற்றி பெற்று மத்திய மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு உறுப்பினர் ஆர்.ராஜாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(க.கிஷாந்தன்)