தேசிய பாடசாலைகளில் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை சேர்க்கும்போது ஏற்கனவே உள்ள விதிமுறைகளை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும் போது அதிபர்கள் மீதான அழுத்தங்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
தேசிய பாடசாலைகளில் இடைநிலை தரங்களுக்கு மாணவர் சேர்க்கை தொடர்பிலான விசேட கணக்காய்வு அறிக்கையின் ஊடாக தேசிய கணக்காய்வு அலுவலகம் இதனை சுட்டிக்காட்டியுள்ளது.
2020 ஜனவரி முதலாம் திகதிக்கும் 2022 மே மாதம் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தேசிய பாடசாலைகளில் இடைநிலை தரங்களுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பில் இந்த கணக்காய்வு அறிக்கை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த காலப்பகுதியில் சுற்றறிக்கைகள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட முறையான விதிமுறைகளை மீறி கல்வி அமைச்சின் செயலாளரினால் அதிபர்களுக்கு வழங்கப்பட்ட கடிதங்களை பயன்படுத்தி 2,237 மாணவர்கள் பாடசாலைகளுக்கு உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
விதிமுறைகளை மீறியமையால் பல பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதுடன், தகுதியான மாணவர்களை பாடசாலையில் சேர்த்துக்கொள்ள முடியாத சந்தர்ப்பங்களும் காணப்படுவதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அமைச்சின் செயலாளரின் வேண்டுகோளுக்கு அமைய சில தேசிய பாடசாலைகளின் அதிபர்கள், மாணவர்களை பாடசாலைக்கு அனுமதிக்காததால் ஏற்பட்ட பல்வேறு பாதிப்புகளை கணக்காய்வு அலுவலகம் தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.