தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளின் அதிபர்களுடைய இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பாடசாலைகளில் காணப்படும் மனிதவளப் பற்றாக்குறை தொடர்பில் ஆராயும் உபகுழுவில் கலந்துரையாடப்பட்டது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த உபகுழு பிரதியமைச்சர் (கலாநிதி) கௌசல்யா ஆரியரத்ன தலைமையில் அண்மையில் கூடியபோதே இவ்விடயம் கலந்துரையாடப்பட்டது. கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் கமல் ஆரியசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
கல்வி தொடர்பான ஐந்து தொழில்முறை சேவைகளையும் தகுதிகள் மற்றும் பதவி நிலைகளுக்கு ஏற்ப நிலைப்படுத்தல் மற்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான வெற்றிடங்களின் கணிப்பு ஆகியவற்றைக் காண்பிக்கும் புதிய டிஜிட்டல் தரவுத்தளத்தை தயாரித்தல் போன்றவை தொடர்பில் குழுவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் குறித்து இங்கு ஆராயப்பட்டன.
அதிபர் சேவையில் முதல் தர அதிபர் பதவிகளில் உள்ள சகல அதிகாரிகளும் அதிபர் பதவிகளை மாத்திரம் வகித்தல், ஆறு வருட சேவையைப் பூர்த்தி செய்ததும் இடமாற்றங்களுக்கு உட்படுத்தல் போன்ற பல முன்மொழிவு குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இதற்கமைய, இந்த விடயங்கள் தொடர்பான அமைச்சின் பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களை இரண்டு மாதங்களுக்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன் பின்னரே குறித்த விடயம் தொடர்பான இறுதிப் பரிந்துரைகள் தயாரிக்கப்படும் என குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
உபகுழுவின் உறுப்பினர்களான பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் மற்றும் சுதத் வசந்த.த சில்வா ஆகியோரும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.




