தேசிய விவசாய ஆராய்ச்சி சிறப்பு விருது வழங்கும் விழா ஜனாதிபதி தலைமையில்!

0
2

தேசிய விவசாய ஆராய்ச்சி சிறப்பு விருது வழங்கும் விழா 2023 மற்றும் 2025 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (23) பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

ஆராய்ச்சித் துறையில் சிறந்து விளங்க, விவசாய ஆராய்ச்சியாளர்களை ஊக்குவித்தல், அவர்களின் தொழில் எதிர்பார்ப்புகளை மேம்படுத்த உதவுதல் மற்றும் தேசிய விவசாயத் துறையின் வளர்ச்சிக்கு அளிக்கப்பட்ட பங்களிப்பைப் பாராட்டும் நோக்கங்களுக்காக இலங்கை விவசாய ஆராய்ச்சிக் கொள்கை சபை (SLCARP) இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்கின்றது.

இந்த ஆண்டு விருது வழங்கும் விழாவில், 2023 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான வனவியல் மற்றும் ஏற்றுமதி விவசாயப் பயிர்கள் உள்ளிட்ட பெருந்தோட்ட பயிர்ச்செய்கை, மலர் வளர்ப்பு உள்ளிட்ட பெருந்தோட்டம் அல்லாத பயிர்ச்செய்கை, கால்நடைகள் மற்றும் மீன்வளர்ப்பு மற்றும் நீர்வாழ் வளங்கள் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் விவசாய ஆராய்ச்சி சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விருது வழங்கும் விழாவில் உரையாற்றிய கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால்காந்த, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு இறக்குமதியை நம்பியிருக்க வேண்டியிருப்பதும், அதற்காக நுகர்வோர் பெரும் செலவுகளைச் சுமக்க வேண்டியிருப்பதும் விவசாயத் துறையில் எழுந்துள்ள பாரிய பிரச்சினையாகும் என்று தெரிவித்தார்.

எனவே, விவசாயத் துறையை நவீனமயமாக்குவதற்கான உத்திகளைக் கண்டறிதல், இளம் விவசாய தொழில்முனைவோரை உருவாக்குதல், விவசாயப் பொருட்களுக்கு பெறுமதி சேர்த்தல், ஏற்றுமதி சார்ந்த விவசாய உற்பத்திகளின் வளர்ச்சியை மேம்படுத்தல் ஆகியவற்றிற்கு விஞ்ஞான ஆராய்ச்சி மூலம் பங்களிப்பது விவசாய ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பாரிய பொறுப்பு என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளை கொள்கை வகுப்பாளர்களுக்கும் தொடர்புடைய அனைத்து தரப்பினர்களுக்கும் போதுமான அளவு தெரிவிப்பதன் மூலம், அந்தக் கண்டுபிடிப்புகளை களத்தில் யதார்த்தமாக மாற்ற செயற்படுமாறு ஆராய்ச்சியாளர்களை கேட்டுக்கொண்டார்.

மேலும், விவசாய ஆராய்ச்சிக் கொள்கை சபை இந்நாட்டில் விவசாய ஆராய்ச்சிக்கு வழங்கும் பங்களிப்புக்காக தனது நன்றியைத் தெரிவித்த அமைச்சர், விவசாயத் துறையில் உள்ள அனைத்துத் தரப்பினர்களுக்கும் சிறந்த, அதாவது, இந்த நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும், இறக்குமதியைக் குறைத்து விவசாய சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும், சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாய வளர்ச்சியை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் மேலும் குறிப்பிட்டார்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் விதாரண ஆகியோருடன் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட அரச அதிகாரிகள், இலங்கை விவசாய ஆராய்ச்சிக் கொள்கை சபையின் தலைவர் பேராசிரியர் ஆர்.எஸ். தர்மகீர்த்தி பல்கலைக்கழக உபவேந்தர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் தனியார் துறை தரப்பினர்கள் உட்பட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here