தேயிலை மலைக்குள் சிக்கிய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி மீட்பு.

0
157

பொகவந்தலாவ – செப்பல்ட்டன் தோட்டத்தின் மேற்பிரிவில், மூன்று அடி நீளமான ஆண் சிறுத்தைபுலியொன்று தேயிலை மலைக்குள் சிக்கி, தப்பிக்க முடியாமல் சுமார் 8 மணிநேரம் தவித்தது. இதனையடுத்து மயக்க ஊசி செலுத்தப்பட்டு அது உயிருடன் மீட்கப்பட்டது.

மேற்படி தோட்டத்தில் சிறுத்தைப்புலி சிக்கியிருப்பதை அறிந்த தோட்ட தொழிலாளர்கள் அது தொடர்பில் நேற்று 12.10.2022 காலை தோட்ட அதிகாரிக்கு தகவல் வழங்கியுள்ளார்கள். பின்னர் அதிகாரி பொகவந்தலாவ பொலிஸாருக்கு தெரியப்படுத்தினார். அதன்பின்னர் பொலிஸார் ஊடாக நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து பொலிஸார், வனவிலங்கு அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தோட்ட மக்களும் குவிந்தனர்.

மரக்கறி தோட்டமொன்றில், மிருகங்களிடமிருந்து விளைச்சலை பாதுகாக்கும் நோக்கில் போடப்பட்டிருந்த கம்பி வலையிலேயே இச்சிறுத்தைப்புலி சிக்கியுள்ளது என்றும், மக்கள் நடமாட்டத்தை கண்டதும் வலையை பிய்த்துக்கொண்டு தேயிலை மலைப்பகுதியில் சிக்கியுள்ளது.

கம்பியில் சிக்கிய சிறுத்தைப்புலி தேயிலைமலைப்பகுதியில் இறுக, தப்பிக்க முடியாமல் சிறுத்தைப் புலி சிக்கிக்கொண்டது.

பின்னர், ரந்தெனிகல மிருகவைத்தியசாலையிலிருந்து, மிருக வைத்திய அதிகாரியொருவரும் வரழைக்கப்பட்டு, துப்பாக்கி மூலம் மயக்க மருந்து ஊசி செலுத்தப்பட்டு, சிறுத்தைப்புலி பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

சிகிச்சைகளுக்காக மினிப்பே மிருக வைத்தியசாலைக்கு சிறுத்தைப்புலி கொண்டு செல்லப்பட்டது. குணமடைந்த பின்னர் சரணாலயத்தில் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here