தேர்தல்முறை, அதிகாரப்பகிர்வு, காணிப்பகிர்வு தொடர்பில் குழுக்களை தமிழ் முற்போக்கு கூட்டணி நியமித்தது! : மனோ

0
145

தேர்தல் முறை சீர்த்திருத்தம், அதிகாரப்பகிர்வு, ஏழு பர்சஸ் காணிப்பகிர்வு ஆகிய விவகாரங்கள் தொடர்பில் மூன்று ஆய்வு குழுக்களை நேற்று மாலை களுத்துறை வாதுவையில் கூடிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் மத்தியக்குழு நியமித்துள்ளது.

இந்த குழுக்கள் இம்மாத இறுதிக்குள் இவ்விவாரங்கள் பற்றிய சிபாரிசுகளை ஆய்வறிந்து மத்தியக்குழுவிற்கு தெரிவிக்கும். இவற்றையொற்றி தேர்தல்முறை சீர்திருத்தம், அதிகாரப்பகிர்வு ஆகிய விடயங்கள் தொடர்பிலான கூட்டணியின் நிலைப்பாடுகள் அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவுக்கு சமர்பிக்கப்படும்.

அதேவேளை மலையகத்தில் ஏழு பர்சஸ் காணி பகிர்வு தொடர்பிலான சிபாரிசுகள், மேல்நடவடிக்கைகளுக்காக அமைச்சரவைக்கு சமர்பிக்கப்படும் என்ற தீர்மானங்களுடன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தொழிற்சங்க பிரிவான பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளராக முனால் பிரதியமைச்சர் வி. புத்திரசிகாமணியை நியமிக்கும் தீர்மானமும் எடுக்கப்பட்டது என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நேற்று களுத்துறை வாதுவையில் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டணியின் மத்தியக்குழு கூட்டம் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

ஏற்கனவே தமிழ் முற்போக்கு கூட்டணி நியமித்திருந்த 16 பேர் கொண்ட விற்பன்னர் குழுவின் சிபாரிசுகளின் அடிப்படையிலும், தற்போதைய அரசியல் நகர்வுகளின் அடிப்படையிலும் ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கைகளை இம்மாத இறுதிக்குள் மத்தியக்குழுவுக்கு சமர்பிக்கும்படி, இன்று நியமிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு குழுக்கள் கூட்டணியின் மத்தியக்குழுவினால் பணிக்கப்பட்டுள்ளன.

சமூக ஆய்வாளர் பி. முத்துலிங்கம், பொது செயலாளர் அன்டன் லோரன்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திலகராஜ், வேலுகுமார், அரவிந்தகுமார், ஆய்வாளர் விஜயசந்திரன், தொழிற்சங்க துறை செயலாளர் வி. புத்திரசிகாமணி, கூட்டணியின் பேச்சாளர் சண் பிரபாகரன் ஆகியோர் அடங்கிய இந்த அக்குழுக்கள் நேற்று நியமிக்கப்பட்டன. நேற்றைய கூட்டத்தில், கூட்டணியின் பிரதிதலைவர்கள் அமைச்சர்கள் பழனி திகாம்பரம், வி, இராதாகிருஷ்ணன் மற்றும் மத்தியக்குழு உறுப்பினர் சரத் அத்துகோரள ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் மூன்று ஸ்தாபக அங்கத்துவ அரசியல் அமைப்புகளுடன் மேலதிகமாக புதிய அரசியல், தொழிற்சங்க, சமூக அமைப்புகளை கூட்டணியில் இணைத்துக்கொள்வது தொடர்பில் விண்ணப்பங்களை ஆராய்வது என்றும், கூட்டணி கட்சிகளின் அங்கத்துவம் இன்றி, கூட்டணியில் பொதுவாக இணைந்துக்கொள்ள விரும்பும் எந்த ஒரு தனிநபருக்கும் சந்தர்ப்பம் வழங்கும் முகமாக, தமிழ் முற்போக்கு கூட்டணியில் பொது அங்கத்துவம் என்ற அங்கத்துவ பிரிவை ஏற்படுத்துவது என்றும் மத்தியக்குழுவில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here