அரச வைத்திய உத்தியோகஸ்த்தர்கள் ஆரம்பித்துள்ள நாடுதழுவிய வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மலையக சுகாதார சேவைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின.
இதனால் மலையக பகுதியில் உள்ள அரச வைத்தியசாலைகளின் பணிகள் முடங்கின.
பொருளாதார நெருக்கடியில் வாழும் பெருந்தோட்ட மக்கள் பெரும்பாலும் அரச வைத்தியசாலைகளையே நம்பியே சிகிச்சைக்காக வருகை தருகின்னர். எனினும் இன்றைய தினமும் வைத்தியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் குதித்ததன் காரணமாக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக தூர பிரதேசங்களில் இருந்த வருகை தந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
வெளிநோயாளர் பிரிவு உட்பட பல்வேறு சுகாதார சேவைகள் இன்று இடம்பெறாததன் காரணமாக மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
அரச வைத்திய உத்தியோகஸ்த்தர்களின் சங்கம் இடம்மாற்ற சபைக்கு அப்பால் வைத்தியர்களை இணைப்பு செய்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (20) திகதி ஐந்து மாவட்டங்களில் அடையாள வேலை நிறுத்தத்தினை மேற்கொண்டது.
இதனால் நேற்றைய தினமும் சிகிச்சைக்காக வருகை தந்தவர்கள் சிகச்சை பெற்றுக்கொள்ள முடியாது வீடு திரும்பினர்.
இந்நிலையில் அரசாங்கத்தினால் சாதகமான பதில் கிடைக்காததன் காரணமாக இன்று (21) நாடு தளுவிய ரீதியில் தமது போராட்டத்தினை முன்னெடுத்துள்ளது.
எனினும் அவசர சிகிச்சைப்பிரிவு, சிறுவர் சிகச்சை பிரிவு புற்று நோய் பிரிவு,கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொடுக்கும் பிரிவுகள் ஆகியன தங்கு தடையின்றி வழமை போல் இயங்கின.
எவ்வாறான போதிலும் கொரோனா தொற்றுக்குள்ளாகி பொருளாதாரம் பாதித்துள்ள நிலையில் அவ்வாறான வேலை நிறுத்தம் மேற்கொள்வது சாதாரணமாகாது என சிகிச்சைக்கு வந்தவர்கள் தெரிவித்தனர்.
பொருளாதார சுமையுடன் வாழும் இம் மக்கள் பல்வேறு போராட்டங்கள் காரணமாக மேலும் பாதிக்கப்படுவதனால் பாரிய அளவில் பொருளாதார நெருக்கடிக்களுக்கு முகம் கொடுக்க நேரிடுவமாகவும் எனவே அரசாங்கம் இது குறித்து கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கே.சுந்தரலிங்கம்