தொழிற்சங்க அனுபவம் நிறைந்த அருள்சாமியின் மறைவு அதிர்ச்சி அளிக்கின்றது – தொ தே சங்கம் அனுதாபம்!

0
130

(க.கிஷாந்தன்)

அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் நீண்டகால தொழிற்சங்க அனுபவங்களைக் கொண்ட அருள்சாமியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிப்பதாகவுள்ளது. அன்னாரின் மறைவினால் துயருற்று இருக்கும் குடும்பத்தாருக்கு தொழிலாளர் தேசிய சங்கம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது என தொழிலாளர் தேசிய சங்கம் விடுத்திருக்கும் அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது ஆரம்பகாலத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஊடாக தொழிற்சங்க துறைக்கு வந்த அவர், பின்னாளில் மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் விடுதலை முன்னணி போன்ற அமைப்புகளுடன் இணைந்து அரசியல், தொழிற்சங்க பணிகளை முன்னெடுத்தார்.

மலையக மக்கள் முன்னணியில் இருந்த காலத்தில் எமது சங்கத்தின் தற்போதைய தலைவர் அவருடன் இணைந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு இருப்பதுடன் தொழிலாளர் விடுதலை முன்னணியை தோற்றுவிப்பதிலும் பங்கேற்றிருந்தனர்.

2006 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் விடுதலை முன்னணி ஆகியன இணைந்து ஜனநாயக மக்கள் கூட்டணியாக செயற்பட்ட போது தொழிலாளர் தேசிய சங்கத்துடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தார்.

இந்த காலத்திலேயே அமரர். அருள்சாமி மத்திய மாகாண கல்வி அமைச்சராகவும் செயற்பட்டார். பின்னாளில் மீண்டும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுடன் இணைந்து கொண்டதன் பின்னர் அரசியல் ரீதியாக முரண்பாடான கருத்து நிலைப்பாடுகளைப் பகிர்ந்து கொண்ட போதும் தனிப்பட்ட ரீதியில் தொடர்புகளை நல்ல நிலையிலேயே பேணி வந்தார்.

மலையகத் தொழிற்சங்க செயற்பாடுகளில் அனுபவம் கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வரும் இன்றைய காலகட்டத்தில் அனுபவமிக்க அருள்சாமியின் திடீர் மறைவு பேரிழப்பாகும்.

மலையகத் தொழிற்சங்க வரலாறு பல அனுபவமிக்க தொழிற்சங்க ஆளுமைகளைக் கண்டிருக்கின்றது. அந்த வரலாற்று வரிசையில் அமரர் சந்தனம் அருள்சாமியும் நிச்சயம் இடம்பெறுவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here