தொழிலாளர்களுக்காக சர்வதேச தொழில் அமைப்பிற்கு கடிதம்.

0
162

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுத்து அவர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விடயத்தில் சர்வதேச தொழில் அமைப்பின் (ஐ.எல்.ஓ.) தலையீடும் அவசியம். அதனைகோரி மலையக மக்கள் முன்னணி கடிதம் அனுப்பிவைத்துள்ளது – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அட்டனில் இன்று (04.07.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துவிட்டோம் என மார்தட்டியக்குழு இன்று காணாமல்போயுள்ளது. ஆயிரம் ரூபா விவகாரத்தின் பின்னர் தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்கள் நிர்வாகத்தால் நசுக்கப்படுகின்றனர். தொழில் சுமைகள் அதிகரிக்கப்பட்டு, வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்கள் இன்று போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித நிபந்தனைகளும் இன்றி, முன்பு செய்த வேலையின் அளவுக்கே நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைப்பதை உறுதிப்படுத்தப்பட வேண்டும், வேலை சுமை அதிகரிக்கப்படக்கூடாது, அவர்களின் தொழில்சார் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு அவசியம் என்ப உட்பட மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து தொழில் ஆணையாளருக்கு நாம் கடிதம் எழுதினோம். தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஒத்துழைப்பு வழங்குமாறு கம்பனிகளிடமும் கோரினோம். இரு தரப்புகளுமே எமது கோரிக்கைகளுக்கு செவிமடுக்கவில்லை.

இது விடயம் தொடர்பில் அரசாங்கம் இனியும் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்குமா என தெரியவில்லை. எனவே, அரசு, கம்பனிகள் இணைந்து தீர்வுகளை வழங்கவேண்டும், இதற்கான தலையீடுகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச தொழில் அமைப்புக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியாக கடிதம் அனுப்பியுள்ளோம். தேயிலை ஏற்றுமதி என்பது சர்வதேசத்துடன் தொடர்புபட்ட விடயமாகும். இது விடயத்தில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும்.” – என்றார்.

க.கிஷாந்தன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here