தனது அரசியல் லாபத்திற்காக மக்களை தூண்டி விடும் வங்குரோத்து நிலைமையில் எதிர்க்கட்சிகளே உள்ளன. நாம் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்தாலும் அரசாங்கம் எடுக்கும் சில முடிவுகளுக்கு நாம் எமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன் அழுத்தங்களைப் பிரயோகித்தும் எமது மக்கள் பலத்தின் ஊடாகவும் எம் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுத்த வண்ணம் உள்ளோம். கடந்த காலங்களில் கடந்த அரசாங்கம் செய்த அனைத்து நாசகர செயல்களுக்கும் துணைநின்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் எம்மை வசைபாடுவது வேடிக்கையாக உள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் உரையாற்றுகையில்
பெருந்தோட்ட மக்களுக்கான ஆயிரம் ரூபாய்க்கான வேதனம் பலரின் பேசு பொருளாக மட்டுமே இருந்த வேளையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதனை செயல்வடிவதிதற்கு கொண்டு வந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. மக்களின் எதிர்பார்ப்பு இவ் வேதன அதிகரிப்பு என்பதன் காரணமாக 30 வருட காலங்களுக்கு மேலாக அமுலில் இருந்த கூட்டத்திலிருந்து பெருந்தோட்ட கம்பனிகள் வெளியேறினார்கள். நாம் அரசாங்கத்தின் ஊடாகவும் தொழில் அமைச்சின் ஊடாகவும் சம்பள நிர்ணய சபையின் ஊடாக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றினோம். ஒரு தொழிற்சங்கமாக மக்கள் எதிர்நோக்கும் தொழிற்சங்க பிணக்குகளுக்கு உடன் தீர்வை நாம் பெற்றுக் கொடுத்த வண்ணம் உள்ளோம். ஆனால் சில வங்குரோத்து அரசியல் செய்யும் சில தொழிற்சங்க பிரதிநிதிகள் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்காது விமர்சன அரசியலையே செய்து ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பலவற்றை உளறுகின்றனர். இவர்கள் தொழிற்சங்க மற்றும் அரசியல் அடிப்படையை புரிந்து கொள்ளவில்லை என்பது மக்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும். அண்மையில் அக்கரப்பத்தனை பெருந்தோட்ட யாகத்திற்கு கீழ் பணிபுரியும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமக்கு எதிராக கம்பெனிகள் செய்யும் அட்டூழியத்தை எதிர்த்தும் கூட்டு ஒப்பந்தத்தில் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை மேலும் மீண்டும் ஏற்படுத்துவதற்காகவும் அவர்கள் ஒரு கவனயீர்ப்பு பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். ஒரு பொறுப்பு வாய்ந்த தொழிற்சங்கமாக நாம் அவர்களுக்கு ஆதரவை வழங்கியதுடன் அவர்களுக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கும் முகமாக எமது எமது பொது செயலாளர் கௌரவ அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் தலைமையில் தொழில் ஆணையாளர் முன்பாக கம்பெனியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் தோட்ட முகாமையாளர்களுடன் உடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கான தீர்வை நாம் பெற்றுக் கொடுத்தோம்.
பேர் பதிவு செய்யப்படாத தொழிலாளர்களுக்கு நிரந்தர பணி நியமனமும், அவர்களின் கொழுந்து நிறுவையில் ஸ்திரத்தன்மையும் அவர்கள் பறிக்கும் கொழுந்தின் அளவை வறட்சி காலங்களில் குறைக்கவும் அவர்களின் வேதனத்தை சுரண்டலுக்கு உட்படுத்தாது நேர்த்தியான முறையில் வழங்கவும் என பல தீர்வுகளை நாம் பெற்றுக் கொடுத்தோம்.
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எதிர்கட்சிகளை போன்று தமது அரசியல் சுயலாபத்திற்காக மக்களை வீதியில் இறக்கவோ அல்லது அவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்தி அல்லலுக்கு உட்படுத்தி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கிடையாது. அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மலையக மக்கள் முன்னணி சார்பாக கலந்து கொண்ட பிரதிநிதி அந்தப் பேச்சுவார்த்தையில் மௌவுனியாக இருந்துவிட்டு அவரை சார்ந்தோர் இன்று ஊடகங்களில் வந்து ஊழை இடுவது வேடிக்கையாக உள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிக்கும் தொழிற்சங்கங்கள் இதுவரை எத்தனை தொழிற்சங்க ரீதியிலான செயற்பாடுகளை நடாத்தி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுத்து உள்ளார்கள் என்பது இன்றுவரை கேள்விக்குறியே. மக்களின் உரிமையை பறிக்கும் எவராக இருப்பினும் அது கம்பெனிகள் ஆக இருக்கட்டும் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் ஆக இருக்கட்டும் யாராக இருப்பினும் எதிர்க்கும் தைரியமும் வீரமும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு என்றும் உள்ளது ஆகவே விமர்சன அரசியல் செய்து அரசியல் பிழைப்பு நடத்தாது மக்களின் நலனுக்காக ஓரளவேனும் சிந்தித்து செயல்பட்டால் மலையக மக்களை மாத்திரம் அன்றி இலங்கையில் வாழும் அனைவரும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க முடியும் என்பதை நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
க.கிஷாந்தன்