நாட்டில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரித்து வரும் நிலையில் நுவரெலியா மாவட்டத்திலும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டு வருகின்றது. கொரோனா தொற்றாளர்களை தனிமைப்படுதுவதருக்கு சுமார் இரண்டாயிரம் படுக்கை வசதிகள் தேவையாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது. எனவே, தோட்டங்களில் உள்ள “பிளான்டர்ஸ் கிளப்” களையும் தற்காலிக தனிமைப்படுத்தும் நிலையங்களாக பயன்படுத்தலாம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,
நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களை பராமரிக்கும் வகையில் நுவரெலியா புதிய நகர சபை மண்டபம் 550 க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளைக் கொண்ட தனிமைப்படுத்தும் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், இறம்பொடை கலாசார மண்டபம் மற்றும் அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியனவும் தலா 250 க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் கூடிய தற்காலிக தனிமைப் படுத்தும் நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன. ஏற்கனவே, பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியும் தனிப்படுத்தும் நிலையமாக இயங்கி வருகின்றது.
நாட்டின் சூழ்நிலை கருதி இத்தகைய பொது நிறுவனங்கள் தனிமைபடுத்தும் நிலையங்களாக ஏற்படுதப்பட்டுள்ளமை வரவேற்கத் தக்க விடயமாகும். இதற்கு பொது மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி கொரோனாவைக் கட்டுப்படுத்த முன்வர வேண்டியது அவசியமாகும்.
மேலும், நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கொல்லை பிளான்டர்ஸ் கிளப், பொகவந்தலாவ பிளான்டர்ஸ் கிளப், மஸ்கெலியா குயின்ஸ்லேண்ட் பிளான்டர்ஸ் கிளப் மற்றும் டிக்கோயா தரவளை கிளப் முதலானவற்றையும் தற்காலிக தனிமைப் படுத்தும் நிலையங்களாக மாற்றுவதன் மூலம் நூற்றுக் கணக்கான கொரோனா தொற்றாளர்களை பராமரிக்கக் கூடியதாக இருக்கும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் போது தோட்ட நிர்வாகங்கள் தகுந்த ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.