நாட்டில் நிலவுகின்ற கொரோனா பரவலை கருத்திற் கொண்டு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் பணிப்புரைக்கு அமைய மேதின நிகழ்வுகளை மிகவும் எளிமையான முறையில் தோட்டங்கள் தோறும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,
தொழிலாளர் தேசிய சங்கம் 1965 ஆம் ஆண்டு மே மாதம் முதலாந் திகதி அமரர் வீ.கே. வெள்ளையனால் உருவாக்கப்பட்டு கடந்த 56 ஆண்டுகளாக தொழிலாளர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ள ஓர் அமைப்பாகும். தொழிலாளர்களின் உரிமைகள், சலுகைகள், சேவைக் காலப் பணம் முதலானவற்றைப் பெற்றுக் கொடுத்ததில் எமது சங்கம் பாரிய பங்களிப்பை செலுத்தி வந்துள்ளது.
அந்த வகையில் வீ.கே. வெள்ளையன் வழியில் எமது தலைவர் பழனி திகாம்பரம் சங்கத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதிலும், கட்டுக் கோப்பாக வழிநடத்துவதிலும் அர்ப்பணிப்போடு பாடுபட்டு வருகின்றார். அவர் தமது அரசியல் பிரதிநிதித்துவத்தின் ஊடாக கூட்டு ஒப்பந்த காலத்தில் கொடுத்து வந்த அழுத்தங்கள் காரணமாகவே கடந்த மாதத்தில் 1000 ரூபாவை பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது. இருந்தும் ஆயிரம் ரூபாவைக் கொடுத்து விட்டு தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவதற்கு கம்பனிகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நாம் ஒரு போதும் இடம் கொடுக்க மாட்டோம் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், நாட்டில் வெகுவாகப் பரவி வரும் கொரோனா காரணமாக மேதினக் கூட்டங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில் தோட்டங்கள் தோறும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சங்கத்தின் கொடிகளை ஏற்றி வைத்தும், ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொண்டும் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
Attachments area