தனியார் தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒருவருக்கு ரூபா 200 வீதம் வழங்குவதற்காக பாதீட்டில் ரூபா 5 பில்லியன் ஒதுக்கப்பட்ட விடயத்தில் தலையிடுமாறு கையூட்டல் அல்லது ஊழல் ஆணைக்குழு மற்றும் கணக்காய்வாளர் நாயகம் ஆகியோரிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிதி ஒதுக்கீடு சட்டவிரோதமானதா என்பதை ஆராயுமாறு அவர் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களைப் பராமரிப்பது ஒரு தேசிய முன்னுரிமை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், முக்கிய தோட்ட நிறுவனங்களில் சேராத சுமார் 40,000 தொழிலாளர்கள் இந்த யோசனையின் கீழ் உள்ளடக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிதி ஒதுக்கீடு, முக்கிய நிறுவனங்களின் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நன்மைக்காக மட்டுமே செய்யப்பட்டது என்றும் அவர் வாதிட்டார்.
இந்த வகையில் தனியார் துறை ஊழியர்களின் நலனுக்காக, திரட்டப்பட்ட நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது என்றும் அவர் தனது வாதத்தை முன்வைத்துள்ளார்.




