அரச கூட்டுத்தாபனங்களின் கீழ் இயங்கி வந்த பெருந்தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டதன் பின்னர், கடந்த 24 வருடங்களில் முதன் முறையாக அரசாங்கத்தைத் தலையிடச் செய்து வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக நிவாரணப்படி ஒன்றைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். இதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் அழுத்தமே காரணமாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டுவரும் கூட்டு ஒப்பந்தம் ஒரு வருடத்திற்கு மேலாகவும் புதுப்பிக்கப்படாத நிலையில் அரசாங்கம் தனியார் துறைக்கு அறிவித்த வரவு செலவு திட்ட நிவாரணப்படியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தலையிட்டு சாதகமான முடிவு எட்டப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் விளக்கம் அளிக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்படுகின்ற முறைமையை நாம் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளோம். ஒப்பந்தம் செய்யும் தரப்பினர் அமைச்சுப்பதவி அதிகாரங்களை வைத்துக்கொண்டு திரைக்கு முன் பேச்சுவார்த்தை என்றும் திரைக்குப் பின் கொடுக்கல் வாங்கல்கள் மூலமும் நாட் சம்பளத்தொகையை தீர்மானித்து வந்தமையை நாம் பலமுறை அம்பலப்படுத்தி வந்துள்ளோம். இம்முறை அமைச்சுப்பதவியை இழந்தவர்கள் வழமையான சித்து விளையாட்டுகளின் ஊடாக கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திட முடியாத நிலையில் ‘காலம் கனியும்’ வரை காத்திருப்பதாக தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினையை பணயமாக வைத்து அமைச்சுப்பதவிகளைப் பெற அடித்தளம் போடும் காய்களை நகர்த்த நினைக்கின்றார்கள்.
இத்தகைய கபட நாடகங்களை அம்பலப்படுத்தும் முகமாகவே மக்கள் இம்முறை மக்கள் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்து மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். அரசியல் ரீதியாக மக்கள் எங்களுக்கு வழங்கிய அதிகாரங்களைக் கொண்டு தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் அரசாங்கத்தை தலையிடச் செய்துள்ளோம். கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் வரும் தொழிலாளர்கள் குறைந்த பட்ச வேதனச் சட்டத்திற்கோ, வரவு செலவுத்திட்ட நிவாரணப்படி கொடுப்பனவுகளுக்கோ உரித்துடையவர்கள் அல்ல எனும் சட்ட ஏற்பாடுகள் உள்ள நிலையில், ஒரு வருடத்திற்கு முன்பாக முடிவுற்ற கூட்டு ஒப்பந்தத்திற்கு இந்த சட்ட சரத்துகள் ஏற்புடையதாகாது என பாராளுமன்றில் விவாதித்து அரசாங்கத்தை தலையிடச் செய்துள்ளோம். அரசாங்கம் இந்த தர்க்கத்தை ஏற்று நிவாரணப்படியான மாதாந்தம் 2500ஃ- ஐ வழங்குமாறு அறிவுறுத்தியது போதும் கம்பனிகள் அதனை வழங்க மறுத்த நிலையிலேயே நாம் கவன ஈர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு எமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினோம். அதேபோன்று இப்போது தனியார் கம்பனி பிரதிநிதிகளை அலரி மாளிகைக்கு அழைத்து பிரதமர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடாத்தி கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும் வரை இடைக்கால நிவாரணப்படியாக நாட்சம்பளத்தில் 100ஃ- ஐ அதிகரிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதனை நாங்கள் அரசாங்கத்தில் இருந்தவாறே பேச்சுவார்த்தைகள் மூலமும் கவனயீர்ப்பு நடவடிக்கைகள் மூலமும் சாதித்துள்ளோம். எங்களை அமைச்சுப்பதவிகளைத் துறந்து தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவிடயத்தில் தலையிடக் கோருபவர்கள் அவர்களுக்கு தேவையானவர்களை அமைச்சுப்பதவியில் அமரச் செய்வதற்கான கைக்கூலிகள் என்பது எமக்கு தெளிவாகத் தெரியும். எமது மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ள ஆணை என்ன என்பதை நாம் தெளிவாக விளங்கிக்கொண்டுள்ளோம். மக்கள் ஆணையின் பேரில் எந்த முடிவையும் எடுக்க நாம் பின்னிற்கப் போவதில்லை.
எந்தக் கைக்கூலிகளினதும் கட்டளைகளுக்கும் அடிபணியப்போவதில்லை. இரண்டு வருடத்திற்கு ஒருமுறை சட்டம் பேசும் சட்டத்தரணிகள் கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வோம் என்ற வாய்ப்பேச்சு வீர்ர்கள் என்பதை நாமறிவோம். மீரியபெத்த மக்கள் கொலை செய்யப்பட்டதாக வழக்குத் தாக்கல் செய்வோம் என வாய்ச்சவடால் விட்டவர்கள் தங்களது சட்டத்தை வைத்து இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என தெரியவில்லை. நிவாரணப்படி வழங்க முடியாது என சட்ட வியாக்கியாணம் பேசுவோர் முதலில் கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக வழக்கு தொடருவோம் என ஒவ் வொரு கூட்டு ஒப்பந்த தவணையின்போதும் விடும் அறிக்கைகளை புரட்டிப்பார்த்தால் அவர்களது சட்ட ஞானமும் கெட்ட ஞானமும் நன்றாக விளங்கும். 7 பேரைச் சேர்த்து சங்கம் பதிவு செய்துகொள்ளும் சட்டம் மட்டுமே அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. மக்களிடத்தில் சென்று செயற்பட இவர்கள் வக்கில்லாதவர்கள் என வரலாறு வெளிப்படுத்தியிருக்கிறது.
ஐந்து வருடத்தில் ஐந்து கட்சிதாவிய சட்டத்தரணிகள் நிலையும் இதுதான். இப்போது அரசு தலையிட்டு நிவாரணப்படியைப் பெற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கண்ட சட்டக்குறைபாடுகளுக்கு அர்த்தம் தேடிக் கொண்டு அடுத்து இரண்டு வருடம் கழித்து ‘வழக்கு போடுவோம்’ என வாய்ச்சவடால் விடுவார்கள். நாம் கனடாவிலும், ஐரோப்பாவிலும் சுகபோகமாக வாழ்ந்துகொண்டு பேஸ்புக் கில் மலையக மக்களுக்காக கண்ணீர் விடவில்லை. நாளாந்தம் களத்தில் நிற்கிறோம். மக்கள் ஆணை எங்களுக்கு இருக்கிறது. அந்த மக்கள் தீர்ப்பின்படி செயற்படுவோம். தொழிலாளர் துரோகிகளை ஓரம் கட்டும் வரை எமது பணிகள் பல்வேறு வடிவங்களில் தொடரும். நாம் என்றும் மக்களுடன் செயற்படுகின்றோம். அவர்களது ஆணைப்படியே செயற்படுகின்றோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.