தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 100 ரூபாய் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை 500 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
அட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்:
மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் ஒன்றை நாம் இன்று அட்டனில் நடத்தினோம்.
இன்று நாடு முழுவதும் பொருளாதார நெருக்கடி காணப்படுகிறது. ஆனால் அந்நிய செலவாணியை ஈட்டித் தருவதற்காக தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் அவர்களுடைய வாழ்க்கைச் செலவை ஈடு செய்கின்ற வகையில் அவர்களுக்குரிய வேதனம் அமையவில்லை. தற்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 100 ரூபாவும் அடிப்படைச் சம்பளமாக 900 ரூபாவும் வழங்கப்படுகின்றது.
ஆனால் இந்த முழுமையான சம்பளம் சகல தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைப்பதில்லை. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம், குறைந்த சம்பளம் என்பனவற்றால் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் உடனடியாக தோட்டத் தொழிலாளர்களுக்கு விசேட நிவாரண கொடுப்பனவொன்றை வழங்க வேண்டும்.
தற்போது அரசாங்கத்தினால் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற 100 ரூபாய் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை 500 ரூபாவாக அதிகரிக்க வேண்டும்.
அதேவேளை பெருந்தோட்ட கம்பனிகளும் தொழிலாளர்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும்.
தொழிலாளர்கள் இருந்தால்தான் தோட்டத்துறை இருக்கும். தோட்டத்துறை இருந்தால்தான் கம்பனிகள் இயங்க முடியும்.
இன்று தொழிலாளர்களைத் தோட்டக் கம்பனிகள் கொத்தடிமைகளாக மாற்ற முயற்சிக்கின்றன. பல யுத்திகளை கையாண்டு தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுகின்றன.
ஒரு சில தோட்டங்களில் ஆண் தொழிலாளர்கள் புற்களை பிடுங்கினால் கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் 50 சதம் வழங்கும் முறையைக் கையாண்டு வருகின்றன.
நாளொன்றுக்கு 100 கிலோ புற்களை பிடுங்கினால் 250 ரூபாய் சம்பளம் தான் கிடைக்கிறது.
தோட்டக் கம்பனிகள் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடையாக செயல்படுகின்றன. அந்த வகையில் அரசாங்கமும் பெருந்தோட்ட கம்பனிகளும் அரசாங்கத்தோடு இணைந்து செயற்படுகின்ற இலங்கை தொழிலாளர் காங்கிரசும் தோட்டத் தொழிலாளர்களை வஞ்சித்து வருகின்றன.
இந்த நிலைமை தொடர்ந்தால் தோட்டத் தொழிலாளர்களை இணைத்துக்கொண்டு எதிர்காலத்தில் நாங்கள் போராட வேண்டிய நிலைமை ஏற்படும்.
கடந்த 23 வருடங்களாக நடைமுறையில் இருந்த தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் விடயம் சம்பந்தமான கூட்டொப்பந்தத்தினால் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையே நாசமாகி விட்டது.
தமது தொழிற்சங்கத்துக்கு சந்தாப்பணம் வேண்டும் என்பதற்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மீண்டும் கூட்டொப்பந்தம் தேவை என்ற அடிப்படையில் தற்போது கவனயீர்ப்பு போராட்டமென்ற நாடகத்தை நடத்தி வருகின்றது.
ஆகவே இன்று மீண்டும் ஒரு கூட்டு ஒப்பந்தத்திற்கு செல்வதைவிட தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பிற்கேற்ற வேதனத்தை வழங்குவதற்கு அரசாங்கமும் கம்பனிகளும் இதயசுத்தியுடன் முன்வரவேண்டும்.
சோ. ஸ்ரீதரன்