கொட்டக்கலை லங்கம் பிளான்ட்டேஷனுக்கு உட்பட்ட ஸ்மோல் ட்ரேட்டன் தொழிலாளர்கள் கடந்த புதன்கிழமையிலிருந்து பணிபகீஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தோட்ட நிர்வாகம் 20 கிலோ கொழுந்து பறித்து கேட்டமையினால் குறித்த தோட்ட தொழிலாளர்கள் பணி பகீஸ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த தோட்ட நிர்வாகம் பக்கத்து தோட்டத்திலிருந்து தொழிலாளர்களை இறக்கி பணிக்கு அமர்த்தியமையினால் ஸ்மோல் ட்ரேட்டன் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக 05/07/2021 போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பில் குறித்த தோட்ட மக்கள் தெரிவிக்கையில் தோட்ட நிர்வாகம் அடாவடி தனத்தால் 20 கிலோ கொழுந்து பறிக்குமாறு தோட்ட தொழிலாளர்களை வதைக்கின்றது. ஆனால் 17 கிலோ மாத்திரமே எம்மால் கொழுந்து பறிக்க முடியும். தோட்ட நிர்வாகம் இதனால் தோட்டத்தொழிலாளர்களுக்கு முறையாக வேலைவழங்காமல் பழிவாங்குகின்றது.
இதனால் நியாயம் கிடைப்பதற்காக கடந்த புதன்கிழமையிலிருந்து பணி பகீஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளோம். இந்நிலையில் பக்கத்து தோட்டத்திலிருந்து ஆட்களை இறக்கி வேலை செய்கின்றனர். இதை தட்டி கேட்டதற்காக பொலிஸ் நிலையத்தில் தொழிலாளர்கள் மீது தோட்ட நிர்வாகம் முறைப்பாடு செய்கின்றது. எனவே மலையக அமைச்சர்களும் அரசியல் தலைமைகளும் சரியான தீர்வை பெற்றுத்தரும் வரை போராட்டம் தொடருமென ஸ்மோல் ட்ரேட்டன் தோட்டத்தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.
நீலமேகம் பிரசாந்த்