தோனி கூறிய படியே செய்தேன்..! பெருமிதமடைந்த ரஹானே

0
178

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு கேப்டன் தோனி என்னிடம் கூறிய அறிவுரையின் படியே நான் விளையாடினேன் என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ரஹானே தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்-லில் வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியில் களமிறங்கிய அஜிங்யா ரஹானே வெறும் 19 பந்துகளில் அரை சதம் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

அத்துடன் ரஹானே 27 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் விளாசி 67 ஓட்டங்கள் அதிரடியாக குவித்ததன் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.1 ஓவரிலேயே வெற்றி இலக்கான 158 ஓட்டங்களை கடந்த வெற்றி பெற்றது.

இதையடுத்து போட்டி குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரஹானே, வான்கடே மைதானத்தில் எப்போதும் மிகவும் விருப்பமுடன் விளையாடுவேன்.இங்கு டெஸ்ட் போட்டிகளை தவிர அனைத்து போட்டிகளிலும் விளையாடி உள்ளேன், இங்கு ஒரு டெஸ்ட் போட்டியிலாவது விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

அதே சமயம் மும்பை அணியுடனான போட்டி குறித்து பேசிய ரஹானே, போட்டி தொடங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு தான் ஆடும் லெவனில் நான் இருப்பது தெரிந்தது. மொயீன் அலிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அணியில் சேர்க்கப்பட்டு இருப்பதாக பயிற்சியாளர் என்னிடம் தெரிவித்தார்.

ஐபிஎல் போன்ற ஒரு தொடரில் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

என்னை பொறுத்தவரை நம்பிக்கையை ஒருபோதும் நான் கைவிட்டு விட மாட்டேன், ஆர்வத்துடன் விளையாடுவதில் மட்டுமே எல்லாம் இருக்கிறது.மேலும் சென்னை அணியில் கேப்டன் தோனியும், பயிற்சியாளர் பிளமிங்-கும் வீரர்களை சுதந்திரமாக விளையாட அனுமதிக்கின்றனர்.

நான் பேட்டிங்குக்கு செல்வதற்கு முன்பு கேப்டன் தோனி அழுத்தமின்றி இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு கூறினார், அதன் படியே நானும் விளையாடினேன் என ரஹானே தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here