நவி மும்பையில் நேற்று (21) இலங்கை மற்றும் பங்களாதேஷ் மகளிர் அணிகள் இடையே நடைபெற்று முடிந்த 2025ஆம் ஆண்டின் மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை பங்களாதேஷ் மகளிரை 07 ஓட்டங்களால் வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இந்த வெற்றியுடன் இந்த உலகக் கிண்ணத் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ள இலங்கை வீராங்கனைகள், உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பினையும் உயிர்ப்புடன் வைத்துள்ளனர்.
முன்னதாக போட்டியினா நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவி சமரி அத்தபத்து முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
அதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை மகளிர் அணியினர் சாமரி அத்தபத்து மூவம் சிறந்த ஆரம்பம் பெற்ற போதிலும் பின்னர் மந்தகதியில் ஓட்டங்களை குவித்ததன் காரணமாக 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 202 ஓட்டங்கள் மட்டுமே பெற முடிந்தது.
இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்டத்தில் ஹசினி பெரேரா 99 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 13 பெளண்டரிகள் அடங்கலாக 85 ஓட்டங்கள் பெற்றார். அதேநேரம் சமரி அத்தபத்து 43 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பெளண்டரிகளோடு 46 ஓட்டங்கள் குவித்தார்.
பங்களாதேஷ் பந்துவீச்சு சார்பாக சொர்னா அக்தேர் 3 விக்கெட்டுக்களையும், ரெபியா கான் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 203 ஓட்டங்களை பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் மகளிர் அணி, போட்டியின் இறுதி ஓவர் வரை மிகச் சிறப்பாக செயற்பட்டிருந்தது.
போட்டியின் இறுதி ஓவரில் 6 பந்துகளுக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்டிருக்க, பங்களாதேஷ் அணியானது 194 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது.
எனினும் இறுதி ஓவரில் முதல் நான்கு விக்கெட்டுக்களை பறிகொடுத்த பங்களாதேஷ் வீராங்கனைகள், ஒரு ஓட்டத்தினை மாத்திரமே பெற்றுக் கொள்ள போட்டியில் அவர்கள் 50 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 195 ஓட்டங்களுடன் போட்டியில் படுதோல்வி அடைந்தது.
பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் அதன் தலைவி நைகர் சுல்தானா 77 ஓட்டங்கள் பெற, ஷர்மின் அக்தார் 64 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் எடுத்துக் கொண்டார்.
இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சில் சாமரி அத்தபத்து 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற, சுகந்திகா குமாரி 2 விக்கெட்டுக்களை சுருட்டினார். போட்டியின் ஆட்டநாயகியாக ஹசினி பெரேரா தெரிவானார்.
இப்போட்டியின் தோல்வியுடன் பங்களாதேஷ் இந்த மகளிர் உலகக் கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறுகின்றமை குறிப்பிடத்தக்கது.