நல்லத்தண்ணீர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லதண்ணீர் வாழைமலை தோட்டத்தில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்து தோட்டத்தொழிலாளர்களின் தொடர் குடியிருப்பு ஒன்று சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (11) அதிகாலை சுமார் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த மரம் 10 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பிலேயே வீழ்ந்துள்ளன. இதில் நான்கு வீடுகள் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் ஏனைய வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இந்த நான்கு வீடுகளில் வாழ்ந்த சுமார் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பிரதேசத்தில் தற்போது வீசும் கடும் காற்று காரணமாக இந்த மரம் முறிந்து வீழ்ந்துள்ளது. மரம் முறிந்து விழும் போது குறித்த வீடுகளில் வசிப்பவர்கள் உறங்கிக்கொண்டிருந்துள்ளனர். தெய்வாதீனமாக எவருக்கு காயங்களோ உயிர் சேதங்களோ ஏற்படவில்லை. எனினும் குடியிருப்பு சேதமடைந்துள்ளன.
இந்த மரத்தினை வெட்டி அகற்றும் பணியில் தோட்டத்தில் உள்ளவர்கள் மற்றும் நல்லதண்ணீர் பொலிஸார் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தொடர்ந்தும் மலையகத்தில் சீரற்ற காலநிலை நிலவி வருவதனால் மரங்கள் அருகாமையில் வாழும் மக்கள் மற்றும் மண் சரிவு அபாயம் உள்ள மண் மேடுகள் மலைகளுக்கு சமீபமாக வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு தொழிலாளர் தேசிய சங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக அச்சங்கத்தின் அமைப்பாளர் விஜயரட்ணம் தெரிவித்தார்.
கே.சுந்தரலிங்கம்