பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானங்களின் விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட புனித வலயங்களில் இரண்டு முதல் ஏழு நாட்கள் வரை மதுபானம் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த தகவல்களை கலால் ஆணையாளர் நாயகம் (Excise Department of Sri Lanka) எம். ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தம்புள்ளை (Dambulla) மற்றும் திஸ்ஸமஹாராம நகர சபைக்குட்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பொசன் பண்டிகை வலயங்களில் 21 வெள்ளிக்கிழமை மற்றும் 22 சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு மதுபான சாலைகள் மூடப்படும் என எம். ஜே. குணசிறி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மத்திய நுவரகம் பலாத்த , கிழக்கு நுவரகம் பலாத்த மற்றும் மிஹிந்தலை ஆகிய பிரதேச செயலகங்கள் உட்பட அனுராதபுரம் புனித நகரை உள்ளடக்கிய பகுதிகளில் நேற்று (18.06.2024) முதல் 24 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும் பொசன் வாரத்தில் ஏழு நாட்களுக்கும் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கலால் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலால் ஆணையாளர் நாயகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.