கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் பிறழ்வு இலங்கையில் சமூகப் பரவலடைய ஆரம்பித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ள நிலையில், ஒமிக்ரோன் பிறழ்வை எதிர்கொள்ளும் வகையிலான எவ்வித ஆக்கப்பூர்வமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் கண்டனம் வெளயிட்டுள்ளார்.
அமெரிக்கா, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகள் என உலகில் பல நாடுகளில் ஒமிக்ரோன் பிறழ்வால் அச்சமடைந்து கடுமையான சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சில நாடுகளில் மீண்டும் பொது முடக்கும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால், இலங்கை அரசாங்கம் ஒமிக்ரோன் பிறழ்வை எதிர்கொள்ளும் எவ்வித முன்னேற்பாடுகளும் இல்லாது அசமந்த போக்கில் செயல்படுவதையே காணக்கூடியதாகவுள்ளது.
எதிர்காலத்தில் இலங்கையில் ஆதிக்கம் செலுத்திகக்கூடியதாக ஒமிக்ரோன் பிறழ்வு மாற்றமடையலாம் என விசேட வைத்திய நிபுணர் நதீகா ஜனகே உட்பட பல சுகாதார நிபுணர்கள் அரசாங்கத்துக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர். கொவிட் தொற்றுக்கு உள்ளாகுபவர்களில் 12 சதவீதமானவர்களுக்கு ஒமிக்ரோன் தொற்று இருப்பதாகவும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டின் நிலை இவ்வாறிருக்க அரசாங்கத்துக்குள் உள்ள பங்காளிக் கட்சிகள் முட்டிபோதிக்கொண்டு நாட்டின் உண்மையான சூழ்நிலையை மறைக்க முற்படுகின்றன. அரசாங்கத்தின் இயலாமையை மறைக்கவே இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டு வருகிறது.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு அதிகளவில் வருகைதர ஆரம்பித்துள்ளனர். நாடு முழுவதும் இவர்கள் பயணிக்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் குறித்து கையாளப்படும் சுகாதார வழிகாட்டல்கள் தெளிவில்லாதுள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள கடுமையான கடன் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அதிகரித்தால் நாட்டை மீண்டும் முடக்கும் சூழ்நிலையே ஏற்படும். அரசாங்கத்தின் அசமந்த போக்கால் அந்நிலையையே எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ள நேரிடும் என்றும் எஸ்.ஆனந்தகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.