இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரணமான நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதை நீங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. 1983 ம் ஆண்டு கறுப்பு ஜீலை ஆனது எல்லோருக்கும் தெரிந்த விடயம். தமிழர்கள் தாக்கப்பட்டார்கள் அவர்களுடைய சொத்துக்கள் எரிக்கப்பட்டது. அதற்கு பிறகு 30 வருடகாலமாக யுத்தம் இடம்பெற்றது.
அங்கேயும் தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள். பிறகு இராணுவம் கையாண்டு, அரசாங்கங்கள் கையாண்டு போராளிகளை ஒழித்து வழமையான நிலைமைக்கு திரும்பினாலும் கூட இன்று நாட்டிலே ஏற்பட்டிருப்பது ஒரு இனக்கலவரத்தை தூண்டுவதற்கான ஒரு நடவடிக்கையென நாங்கள் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இந்த 10 வருடகாலமாக இலங்கைக்கான வளர்ச்சி மீண்டும் பாதாள குழிக்கு இட்டுச்செல்வதற்கான ஒரு நடவடிக்கையாக காணப்படுகின்றது. அதனை முற்றுமுழுதாக நிராகரிக்கப்படவேண்டுமென கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
பத்தனை ஸ்ரீ பாத கல்வியியற் கல்லூரியில் 09.03.2018 அன்று நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு இந்தியா புதுச்சேரியிலிருந்து வருகை தந்த முதன்மை செவிலியர் அதிகாரி முனைவர் டாக்டர் இ.பிரமிளா தமிழ்வாணன் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டதோடு, கல்லூரியின் பீடாதிபதி, விரிவுரையாளர்கள், ஆசிரிய பயிலுனர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது பத்தனை ஸ்ரீ பாத கல்வியியற் கல்லூரியில் ஆசிரிய பயிலுனர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
வன்செயல் என்பது இங்கு ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. பொதுமக்களையே பாதிக்கும். இன்று மூஸ்லீம் பள்ளிகளையும், கடைகளையும் திருத்தியமைப்பதற்கு அரசாங்கம் பணத்தை பொதுமக்களிடமிருந்து வரிமூலம் அறிவிட்டே திருத்தியமைக்கவேண்டியுள்ளது. எனவே மக்களுக்கு தான் வரிசுமை அதிகரிக்கும். ஆகவே எங்களுக்கு பிடித்த மதத்தினை நாம் கடைபிடிப்பது போல ஏனைய மதங்களையும் மதித்து நடக்க வேண்டுமென கல்வி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
(க.கிஷாந்தன்)