நாட்டு மக்கள் அனைவருக்கும் சுபிட்சம் கிட்ட சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக!
-அமைச்சர் திகாவின் சுதந்திர வாழ்த்துச் செய்தி
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினம் சிறப்புற வாழ்த்துவதோடு, நாட்டு மக்கள் அனைவருக்கும் சுபிட்சம் நிறைந்த எதிர்காலம் அமைய வாழ்த்துவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் விடுத்துள்ள சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தமது செய்தியில்,
இலங்கை சுதந்திரம் அடைய சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் அனைவருமே பங்களிப்பை செலுத்தியுள்ளார்கள். அதன் பயனாக ஆங்கிலேயரிடமிருந்து எமது நாடு விடுதலை அடைந்து 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. இருந்தும் இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வியர்வை சிந்தி உழைத்து வந்த இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் வாக்குரிமை சுதந்திரத்துக்குப் பிறகு பறிக்கப்பட்டது. இதனால், பாராளுமன்றத்தில் ஏழு பேர் அங்கத்துவம் வகித்த நிலை மாறி, நியமன அங்கத்தவர்களே பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்தார்கள். பின்னர் ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு எமது மக்கள் இலட்சக் கணக்கானோர் தாயகம் திரும்ப எஞ்சியிருந்தோர் நாடற்றவர்களாக இருந்தார்கள். அதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு காலப் போக்கில் அனைவருக்கும் பிரஜாவுரிமை கிடைத்து வாக்களிக்கும் நிலை உருவாகியது.
இன்று எமது மக்கள் சகல தேர்தல்களிலும் வாக்களித்து தேசிய நீரோட்டத்தில் சங்கமித்து வருகின்றார்கள். எனினும், 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பிறகுதான் எமது மலையக சமூகம் நிலவுரிமை பெற்ற சமூகமாக மாறி வருகின்றது. காணி உரிமை, தனி வீடு, பிரதேச சபைகள் அதிகரிப்பு, மலையக அபிவிருத்தி அதிகார சபை என மலையக மக்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டு வருகின்றது. நாம் இன்னும் பெற வேண்டிய உரிமைகள் எவ்வளவோ இருக்கின்றன. அதற்கு வழி வகுக்கும் வகையில் நல்லாட்சி அரசாங்கம் தொடரவும், நாட்டு மக்கள் அனைவரும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழவும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எமது சமூகம் மென்மேலும் வளர்ச்சி பெற்று ஏனைய சமூகங்களுக்கு இணையாக சகல துறைகளிலும் முன்னேறுவதற்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் சுபிட்சம் நிறைந்த எதிர்காலம் அமையவும் அரசியல் ரீதியாக சகலரும் ஒன்றுபடவும் வாழ்த்துகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.