நுவரெலியா – நானுஓயா பிரதேசத்தில், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியை கைகூலிகள் வைத்து தயாரிக்கும் வர்த்தகர்களை கைது செய்யுமாறு, நுவரெலியா மாவட்ட நீதவான் திருமதி லுசாக்கா தர்மகீர்த்தி, நானுஓயா பொலிஸாருக்கு, நேற்று (23) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நானுஓயா பகுதியில், சட்டவிரோத கசிப்பு உற்பத்தி அதிகரித்து வருகின்ற
நிலையில் கசிப்பு விற்பனையில் ஈடுப்பட்ட நபர் ஒருவரை, நானுஓயா பொலிஸார் ஏழு போத்தல் கசிப்புடன் நேற்று முன்தினம் (22) கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரை, நேற்று (23) காலை நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் திருமதி லுசாக்கா தர்மகீர்த்தி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது,
சந்தேக நபர் கசிப்பு தயாரிக்கின்றாரா அல்லது கசிப்பு தயாரிக்கும் வர்த்தகர்களுக்கு கைகூலியாக செயற்படுகிறாரா , எத்தனை போத்தல் கசிப்பு ஒரு நாளைக்கு இவர் விற்பனை செய்கிறார் என நீதவான் வினவினார்.
அப்போது, சந்தேக நபர், தான் ஒரு கைகூலி எனவும் நாள் ஒன்றுக்கு 30க்கும் மேற்பட்ட நிரப்பிய கசிப்பு போத்தல் விற்பனை செய்வதாகவும் வர்த்தகர் ஒருவரின் உதவியுடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
இதை கேட்டறிந்த நீதவான், சந்தேக நபரை இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்து விடுதலை செய்ததுடன், கைக்கூலிகளை வைத்து கொண்டு பாரிய அளவில் கசிப்பு உற்பத்தியை முன்னெடுக்கும் வர்த்தகர்களை கைது செய்து, அவர்களை எதிர்வரும் திங்கட்கிழமை (28) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என, நானுஓயா பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
டி சந்ரு