நான் சாதியால் நெருக்கடிக்கு உள்ளான ஒரு ஆள்” என்று மாரி செல்வராஜ் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
‘பைசன்’ திரையிடப்பட்டு வரும் திரையரங்குகளுக்கு சென்று விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு. இதற்காக திருநெல்வேலியில் உள்ள ராம் திரையரங்கிற்கு சென்றார்கள். இதில் இயக்குநர் மாரி செல்வராஜ், துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ராஜிஷா விஜயன் மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
பார்வையாளர்களுடன் உரையாடிவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. அப்போது பத்திரிகையாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு ஆதங்கத்துடன் பதிலளித்துள்ளார் மாரி செல்வராஜ், அதில், “மணத்தி கணேசன் கதையை சொல்லக் கூடாது என்று யாராலும் சொல்ல முடியாது. அதை மக்கள் முடிவு செய்யட்டும், அதற்காகத் தான் தணிக்கை குழு இருக்கிறது. அதற்கு எல்லாம் உட்பட்டு மட்டுமே படங்கள் எடுக்கிறோம். தனிமனிதனை திருப்திபடுத்த படங்கள் எடுப்பதில்லை. நான் இந்த நாட்டின் பிரஜை, எனக்கென்று ஒரு சுதந்திரம் இருக்கிறது. என்னை பாதித்த கதை, அப்பாவின் கதை, தாத்தாவின் கதை உள்ளிட்டவற்றை சாகும்வரை சொல்வேன்.
ஒரு கதை யோசிக்கும் போதே என் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு தான் யோசிக்கிறேன். மாரி செல்வராஜ் சாதிக்கு எதிரானவன், ஏனென்றால் மாரி செல்வராஜ் சாதியால் நெருக்கடிக்கு உள்ளான ஒரு ஆள். தமிழ் சினிமாவில் அப்படி ஒருவர் இருக்கிறாரா என்று தெரியாது. மாரி செல்வராஜ் இங்கிருந்து கிளம்பி சென்றதற்கான வலியும் வேதனையும் தெரியும். அதனை மறந்துவிட்டு சாதாரணமாக பாடு, ஆடு என்றால் என்னால் முடியாது. நான் தொடர்ந்து சாதியை எதிர்ப்பேன்.
இதுவரை எடுத்த 5 படங்களையும் பார்த்து என்னை அரசாங்கம் பாராட்டியிருக்கிறது, விருதுகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த தமிழ் சமூகம் என்னை கொண்டாடி வருகிறது. ஒட்டுமொத்த சமூகத்திற்குள் இருக்கும் சாதியை மாற்றவேண்டும் என்பதற்காகவே வேதனையுடன் படங்கள் எடுக்கிறோம். அதற்கு எதிராக சில பேர் பேசத் தான் செய்வார்கள். அதையும் மாற்ற வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.
ஒரு படைப்பாளியாக அழுத்தம் இல்லை, ஆனால் பொறுப்பு இருக்கிறது. ஒரு விஷயம் சொன்னால் அதனை நம்புகிறார்கள். எனது சினிமாவை ரொம்ப உன்னிப்பாக பார்ப்பதால், அந்த பொறுப்பு என்னிடம் இருக்கிறது. ஒரு சினிமாவை பொழுதுபோக்காக செய்துவிட்டு போய் என்னால் தூங்க முடியாது. ஒருவேளை நான் இல்லாமல் போனால் கூட, மாரி செல்வராஜ் படம் எடுத்தான் என்று சொல்வதை விட மாரி செல்வராஜ் இதெல்லாம் செய்துவிட்டு போனான் என்று சொல்ல வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
HinduTmail