கடந்த காலங்களில் மக்களுக்காக எதையுமே செய்யாதவர்கள் இன்று மலை மலையாக வந்து பல்வேறு விதமான பொய்களை கூறி வருகிறார்கள். அவர்களின் வார்த்தைகளை கேட்டு பொது மக்கள் ஏமாந்து விடக் கூடாது என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் ஐ.தே.க. வின் “யானை” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அட்டன் குயில்வத்தை தோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
அவர்கள் தோட்டத்தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்திற்கு கைச்சாத்திடுபவர்கள். அத்தோடு இன்று ஊழியர் சேமலாப நிதி அரசாங்கம் சாப்பிட்டு விட்டதாக கூறிவருகிறார்கள். இவர்கள் என்ன தான் பொய் சொன்னாலும் நாங்கள் தான் தொடர்ந்து அமைச்சராக இருக்கப்போகின்றோம். இன்று நாங்கள் காணி உரிமையை பெற்றுக்கொடுத்துள்ளோம். மலையக அபிவிருத்தி அதிகார சபை உருவாக்கி அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். இவ்வாறான சேவைகள் தொடர்ந்தும் நடைபெறுவதற்காகவே நாங்கள் உங்களிடம் வாக்கு கேட்கின்றோம்.
இந்த அரசாங்கம் உருவானதால் தான் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம். மலையக மக்களுக்காக அரசாங்கம் இன்று காணிகளை தங்கு தடையின்றி பெற்றுக்கொடுத்து வருவதடன் பல அபிவிருத்தி பணிகளையும் செய்து வருகிறது.
உங்களுக்கு கடந்த பல வருட காலமான குன்று குழியுமாக காணப்பட்ட வெலிஓயா பாதை நான் வந்த பின் தான் காபட் இட்டு புனரமைக்கப்பட்டது. அது மட்டுமல்லாது மலையகத்தில் பல பாதைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. நான் தோட்டத் தொழிலாளியின் பிள்ளை என்பதால் என்னை தூற்றுகிறார்கள். தோட்டத் தொழிலாளியின் பிள்ளைகள் தலைவர்களாக வரக்கூடாதா? சற்று சிந்தித்து பாருங்கள் சம்பள பிரச்சினைக்கு நான் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத போதிலும் உங்களுக்கு சம்பள உயர்வு கோரி போராடினேன்.
இன்று நீங்கள் எதிர்கட்சியில் உள்ளவர்களுக்கு வாக்களித்தால் இந்த பிரதேசத்தில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள முடியாது. எனவே எங்களை நம்பி வாக்களித்தால் நாங்கள் ஒரு போதும் உங்களை ஏமாற்ற மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
(க.கிஷாந்தன்)