நுவரெலியாவின் பிரதான நகரமும் நுவரெலியாவின் நுழை வாயிலாக காணப்படும் ஹட்டன் நகரத்தில் அமைந்துள்ள பிரதான பஸ் தரிப்பு நிலையத்தினை நாளாந்தம் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர்.
குறித்த பஸ் தரிப்பு நிலையத்தில் குப்பைக்கூலங்கள் நிறைந்து துர்நாற்றம் வீசுவதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குறித்த பஸ் தரிப்பு நிலையத்திற்கு காலையும் மாலையும் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி, புனித கப்ரியல் மகளிர் கல்லூரி புனித ஜான் பொஸ்கோ கல்லூரி, ஸ்ரீ பாத சிங்கள மகா வித்தியாலயம் உள்ளிட்ட பிரதான பாடசாலைகளுக்கு சுமார் ஆயிரக்கணக்கான மாணவர்கள் காலையும் மாலையும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் பஸ் தரிப்பு நிலையத்தில் நிறைந்து காணப்படும் குப்பைகள் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் காணப்படுகின்றன. பஸ் தரிப்பு நிலையத்திற்கு பின் புறத்தில் அமைந்துள்ள நீர் வழிந்தோடும் கால்வாய்கள் பல மாதங்களாக சுத்தப்படுத்தப்படாததன் காரணமாகவும் குப்பைகளால் நிறைந்துள்ளதனாலும் பலர் குறித்த கால்வாய்களை சிறுநீர் கழிப்பதற்கு பயன்படுத்துவதனாலும் நிற்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகின்றன.
இதனால் பஸ்ஸினுள் மக்கள் மூக்கை முடிக்கொண்டு இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். பஸ் தரிப்பு நிலையத்தில் பாரிய குளம் போன்ற குழிகள் காணப்படுவதனால் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். மழை நேரங்களில் நீர் நீச்சல் தடாகம் போல் காட்சியளிப்பதாகவும் உலகில் எந்த ஒரு பஸ்தரிப்பு நிலையத்திலும் நீச்சல் தடாகத்துடன் பஸ் தரிப்பு நிலையம் இல்லை இதனை காண்பதற்கு ஹட்டனுக்கே வரவேண்டும் என இளைஞர்கள் நகைச்சுவையாகவும் வேதனையாகவும் தெரிவிக்கின்றனர்.
உலகின் பிரசித்தி பெற்ற இடங்களான சிவனொளிபாத மலை, சென்கிளையார், டெவோன் நீர்வீழ்ச்சிகள் மற்றும் உலகின் சிறிய சுவீட்ர்சலாந்து என அழைக்கப்படும் நுவரெலியா போன்ற பிரதேசங்களுக்கு செல்வதெனின்; பெரும்பாலான உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் ஹட்டன் வந்தே செல்கின்றனர். இதனால் நாடு பற்றி மற்றும் ஹட்டன் நகரம் பற்றிய அபிப்பிராயம் உலகம் முழுவதும் மிகவும் மோசமாக பேசுவதற்கு வாய்ப்பு காணப்படுவதாக பலரும் தெரிவிக்கின்றனர்.
பொது மக்கள் சேவைகள் தொடர்பாக முன்னெடுக்க வேண்டிய ஹட்டன் டிக்கோயா நகர சபை எவ்வித கவலையுமின்றி பாராமுகமாக இருந்து விடுவதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். வீடுகளையும் கடைகளையும் வந்து சோதனையிடும் பொது சுகாதார பரிசோதகர்கள் இது குறித்து எவ்வித கரிசணையும் காட்டுவதில்லை என பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எது எவ்வாறான போதிலும் நுவரெலியா மாவட்டத்தில் நுழைவாயிலாக காணப்படும் ஹட்டன் நகரத்தின் அபிவிருத்தி குறித்து பல வருட காலமாக அக்கறை செலுத்தாது இருப்பது குறித்து பொது மக்கள் உரிய நேரத்தில் குறிப்பாக தேர்தல் காலத்தில் சரியான பாடத்தினை கற்பிப்பார்கள் என பலரும் தெரிவிக்கின்றனர்.
மலைவாஞ்ஞன்