இரண்டாவது மதிப்பீட்டுக்காக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலத்தை நாளையதினம் (24) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாது ‘உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பு’ தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று (22) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
அதற்கமைய, அன்றைய தினத்தில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய ‘உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பு’ தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை பி.ப. 5.30 மணி வரை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான தொழில்நுட்ப விடயங்கள் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் மற்றுமொரு பாராளுமன்ற அமர்வு தினமொன்றில் இந்தச் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.