நிசான்த ஜயவீர பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிராணம்

0
10

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நிசான்த ஜயவீர பத்தாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் முன்னிலையில் இன்று (09) சத்திப்பிரமாணம் செய்துகொண்டார்.

சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.

தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் ஊடாகப் பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு உஸ்ஹெட்டிகே தொன் நிசான்த ஜயவீர அவர்கள் இவ்வாறு தேசியப் பட்டியலின் ஊடாக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலைத் தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த ஜூலை 07ஆம் திகதி வெளியிட்டிருந்த நிலையில் அவர் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றிய அவர், குறித்த திணைக்களத்தின் பல்வேறு பதவிகளில் 25 வருடங்களுக்கு அதிகமான காலம் பணியாற்றியுள்ளார். 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் முதல் டிசம்பர் வரையில் மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாகவும் பணியாற்றிய இவர், அதன் பின்னர் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளராகவும் பணியாற்றினார்.

களனி பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞானத்தில் விசேட பட்டத்தைப் பெற்ற ஜயவீர அவர்கள், குறித்த பல்கலைக்கழகத்தில் பொருளியலில் முதுமானிப் பட்டத்தைப் பெற்றிருப்பதுடன், ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வரிவிதிப்புத் தொடர்பான வணிக முகாமைத்துவப் பட்டப்பின்படிப்பு டிப்ளோமாவையும் பெற்றுள்ளார். அத்துடன், களனி பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பத்தில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா பெற்றுள்ள இவர், இந்தியா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் பலவற்றில் பொருளியல் மற்றும் வரிஅறவீடு குறித்து பாடநெறிகளைப் பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here