இந்த நோய் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவுவதில்லை
இந்தியா உட்பட பல நாடுகளில் பதிவாகியுள்ள “நிபா” வைரஸைக் கண்டறிவதற்கான சிறப்புப் பரிசோதனைக் கருவிகளைக் கொண்டுவருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த வைரஸ் தொடர்பில் இலங்கை மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரையுடன் “நிபா” வைரஸை கண்டறிவதற்கு தேவையான விசேட பரிசோதனை கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் சில தினங்களில் அவை இலங்கைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் கருத்து தெரிவித்த வைராலஜிஸ்ட் வைத்தியர் ஜானகி அபேநாயக்க,
” “நிபா” வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உலகளாவிய ரீதியில் குறிப்பிட்ட சிகிச்சையோ தடுப்பூசியோ இதுவரையில் தயாரிக்கப்படவில்லை.” என தெரிவித்தார்.
எவ்வாறாயினும், “நிபா” வைரஸ் பரவுவது மிகவும் மெதுவாக இருப்பதால், நாடுகளுக்கு இடையில் பரவும் அபாயம் இல்லை என தொற்றுநோயியல் துறையின் தலைவர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.
தற்போதைய அறிவியல் தரவுகளின்படி, இந்த நோய் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய்வாய்ப்பட்ட நபரின் உடல் திரவங்கள் மற்றும் மலக்கழிவுகள் மூலம் இது பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், நோயாளிக்கு மிக நெருக்கமாக இருந்தவர்களிடையே பெரும்பாலும் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
வைரஸ் உடலில் உட்புகுந்த நான்கு தொடக்கம் 14 நாட்களுக்கு இடையில், காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி, வாந்தி, தொண்டை வலி போன்ற அடிப்படை அறிகுறிகள் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.