தலால் அப்தோ மஹ்தி எனும் ஏமன் நாட்டு குடிமகனை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை பெற்று, ஏமனின் சனா நகரின் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிமிஷாவிற்கு ‘மன்னிப்பு’ வழங்க முடியாது என மஹ்தியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
“இந்த விவகாரத்தில், சமரசம் அல்லது மத்தியஸ்தத்திற்கான எந்தவொரு முயற்சியையும் நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்” என்று ஏமனின் அட்டர்னி ஜெனரலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்துல் ஃபத்தா மஹ்தி குறிப்பிட்டுள்ளார்.
நிமிஷா பிரியாவுக்கு, கடந்த ஜூலை 16-ஆம் திகதி நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை இறுதி நேரத்தில் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இதைக் குறிப்பிட்டு, “மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை விரைவாக நிர்ணயிக்க உத்தரவிட வேண்டுமென” அப்துல் ஃபத்தா கோரிக்கை வைத்துள்ளார்.
ஏமன் நாட்டின் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட குடும்பம் மன்னிப்பு வழங்குவது மட்டுமே நிமிஷாவை மரண தண்டனையில் இருந்து காப்பற்றுவதற்கான ஒரே வழி என அவரை மீட்க முயற்சித்து வருபவர்கள் கூறிவந்த நிலையில், ‘சமரசத்திற்கு இடமில்லை’ என்ற மஹ்தி குடும்பத்தினரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வழக்கின் பின்னணி என்ன?
கேரளாவின் பாலக்காடைச் சேர்ந்த நிமிஷா பிரியா, கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியர் பணிக்குச் சென்றார்.
அங்கிருந்த சில மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி வந்து டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். டோமி தாமஸும், நிமிஷாவின் மகளும் இப்போது கேரளாவில் வசித்து வருகின்றனர்.
நிமிஷா, 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். 2017ஆம் ஆண்டு, ஏமனின் அல்-பைதா நகரில், ஒரு தண்ணீர் தொட்டியில் மஹ்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
மஹ்தியின் துண்டாக்கப்பட்ட உடல் தண்ணீர் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாதம் கழித்து ஏமனின் மாரிப் எனும் நகரில் நிமிஷா கைது செய்யப்பட்டார்.
மஹ்திக்கு ‘அதிகப்படியான மயக்க மருந்து’ கொடுத்து கொலை செய்ததாகவும், அவரது உடலை அப்புறப்படுத்த முயன்றதாகவும் நிமிஷா மீது குற்றம் சாட்டப்பட்டது.
மஹ்தி நிமிஷாவை உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும், அவரது பணத்தை எல்லாம் பறித்ததாகவும், பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் நிமிஷாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.
இந்தக் கூற்றுகளை தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்தெல் ஃபத்தா பிபிசியிடம் மறுத்திருந்தார்.
தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து மீட்கவே, அவருக்கு நிமிஷா மயக்க மருந்து கொடுத்தார் என்றும் ஆனால் தவறுதலாக மருந்தின் அளவு கூடிவிட்டது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டில், சனாவில் உள்ள நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. 2023இல் ஏமன் உச்ச நீதிமன்றத்தால் அது உறுதி செய்யப்பட்டது. நிமிஷா பிரியா, தற்போது சனா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.