நியூயார்க்கில் துப்பாக்கிச்சூடு: காவலர் உட்பட ஐவர் பலி!

0
5

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காவல் அதிகாரி ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள 44 மாடிகள் கொண்ட அலுவலக கட்டிடத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

பல்வேறு முக்கிய நிறுவனங்கள் இயங்கும் அந்த கட்டிடத்தில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்த மாலை நேரமான சுமார் 6.30 மணி அளவில் தாக்குதல் நடந்துள்ளது.

காவல் துறையின் வசம் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கண் கண்ணாடி அணிந்த படி நீல நிற ஆடை அணிந்திருந்த நபர் ஒருவர், கையில் துப்பாக்கி உடன் அலுவலக கட்டிடத்தில் நுழைந்து, தாக்குதல் நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

இதை நியூயார்க் காவல் துறையும், அமெரிக்க செய்தி நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன.
தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளன. அதில் தாக்குதலில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள அங்கிருந்த நாற்காலிகள் மாதிரியான பொருட்களை பயன்படுத்தி கொண்டுள்ளனர்.

சினிமா படங்களில் வரும் காட்சியை போல கட்டிடத்தில் இருந்த மக்கள் கைகளை தலைக்கு மேல் உயர்த்தியபடி ஒவ்வொருவராக அந்த கட்டிடத்தில் இருந்து வெளிவந்தனர். இதுவும் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவாக வெளியாகி உள்ளது.

இந்த தாக்குதலை லாஸ் வேகாஸ் பகுதியை சேர்ந்த ஷேன் தமுரா என்பவர் நடத்தியுள்ளார். தாக்குதலுக்கு பிறகு தன்னைத்தானே அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளார். அவரது உடலில் இருந்த துப்பாக்கிச் சூட்டின் காயம் அதை உறுதி செய்வதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் ஷேன் தமுரா ஹவாயில் பிறந்தவர் என தெரியவந்துள்ளது.
லாஸ் வேகாஸுக்கு குடிபெயர்ந்த அவருக்கு குற்றப் பின்னணி எதுவும் இல்லை என்று போலீஸார் கூறியுள்ளனர். தாக்குதல் நடத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறியுள்ளனர்.

தனியார் நிறுவன துப்பறிவாளராக பணியாற்றிய அனுபவத்தை கொண்டுள்ளார் தமுரா. அவரது துப்பறிவாளர் உரிமம் காலாவதியாகி உள்ளது. அவர் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலால் அந்த கட்டிடத்தில் இருந்த மக்கள் பயத்தில் உறைந்தனர். முதலில் கூட்டத்தில் ஏதோ பீதி ஏற்பட்டது போல இருந்ததாகவும். அதன் பின்னர்தான் துப்பாக்கிச் சூடு என தெரியவந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். தாக்குதலை அடுத்து நியூயார்க் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here