தற்போதைய அரசாங்கம் இறக்குமதி செய்த நிலக்கரி தரம் குறைந்தவை என்பதை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்தது என ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கும் சுட்டிக்காட்டி வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தற்போது சமர்ப்பித்துள்ள அறிக்கையின் மூலம் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் இன்று குறிப்பிட்டார்.
இந்த அறிக்கை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள விசேட அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட நிலக்கரி ஆகியவற்றை ஒப்பிட்டு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, தென்னாப்பிரிக்க நிலக்கரி தரம் குறைந்தவை என்பது தெளிவாகிறது. 300 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில், இந்த நிலக்கரியைப் பயன்படுத்தி முழுமையான உற்பத்தித் திறனை எட்ட முடியாமல் போயுள்ளது.
ரஷ்ய நிலக்கரியை விட தென்னாப்பிரிக்க நிலக்கரி எரியும் விகிதம் அதிகமாக உள்ளது. மின் உற்பத்தி நிலையத்தின் செயல்திறன் தரவுகளின்படி (GCE Value), எதிர்பார்க்கப்படும் 5900 முதல் 6200 வரையான மட்டத்தை எட்ட இந்த நிலக்கரி தவறியுள்ளது. லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் அறிக்கைகளே மிகவும் துல்லியமானவை என அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சோ அல்லது மின்சார சபையோ இந்தத் தரவுகளை ஏற்க மறுத்தாலும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இவற்றை ஏற்றுக்கொண்டு தென்னாப்பிரிக்க நிலக்கரி தரம் குறைந்தவை என முறைப்படி அறிவித்துள்ளது.
இந்த தரம் குறைந்த 9 கப்பல் நிலக்கரி காரணமாக நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் 8497 மில்லியன் ரூபாவாகும் என ஆணைக்குழுவின் அறிக்கை கூறுகிறது. மேலும், அதிக சாம்பல் உள்ளடக்கம் மற்றும் நீராவி வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக மின் உற்பத்தி நிலையத்தின் உபகரணங்கள் அதிகளவில் தேய்மானமடைவதற்கும், கொதிகலன்கள் (Boilers) சேதமடைவதற்கும் வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்தார்.
தற்போது அரசாங்கம் அவசரமாக 5 நிலக்கரி கப்பல்களை (தலா 60,000 தொன்) கொள்வனவு செய்யத் தீர்மானித்திருப்பது, ஏற்கனவே கொண்டுவரப்பட்ட நிலக்கரியின் தரமின்மையை மறைமுகமாக ஒப்புக்கொள்வதாகும். ஐக்கிய மக்கள் சக்தி இதனைச் சுட்டிக்காட்டிய போது நிராகரித்த அமைச்சர்கள், இப்போது தரவுகளுடன் நிரூபிக்கப்பட்டுள்ள இந்த ஊழல் மற்றும் நஷ்டம் குறித்து நாட்டு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும் என சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.




