(க.கிஷாந்தன்)
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவரும், முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சருமான சந்தனம் அருள்சாமி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை (06-01-2019) காலமானார்.
அன்னாரின் பூதவுல் (மல்லிகைபூ சந்தி) இலக்கம் 315, டிம்புள்ள வீதீ, அட்டன் இல்லத்தில் வைக்கப்பட்டு இறுதி கிரியைகள் நடைபெறும்.
சிறந்த தொழிற்சங்க அரசியல் அனுபவசாளியான அருள்சாமி சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் தனது 59 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
தலவாக்கலை – லிந்துல எல்ஜின் பிரதேசத்தில் அமரர். திரு.திருமதி சந்தனம் அவர்களின் புதல்வராக பிறந்த இவர் தலவாக்கலை சென்.பெற்றிக்ஸ் கல்லூரியில் கல்வி கற்றுள்ளார்.
இவர் பாடசாலையை விட்டு விலகிய பின் தொழிற்சங்கவாதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட பிரதிநிதியாக இணைந்துக்கொண்டார். இவரின் திறமைக்கேற்ப இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்கத்தில் பல பதவிகளை வகித்து வந்த காலத்தில் மத்திய மாகாண சபையில் இ. தொ. கா உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
அந்த காலப்பகுதியில் இ.தொ. கா பொதுச் செயலாளராக இருந்த எம்.எஸ்.செல்லசாமியுடன்,. இ.தொ.காவில் இருந்து விலகி தேசிய தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தை ஆரம்பித்தார். அதன் பின் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் அமரர் பெ.சந்திரசேகரனுடன் இணைந்து மலையக மக்கள் முன்னணி தொழிற்சங்கத்தில் செயல்பட்டார்.
அப்பொழுது நடைபெற்ற மத்திய மாகாண சபை தேர்தலில் மலையக மக்கள் முன்னணி சார்பில் போட்டியிட்ட அருள்சாமியும், தற்போதைய அமைச்சருமான பழனி திகாம்பரமும் வெற்றி பெற்று அருள்சாமி மத்திய மாகாண சபை தமிழ் கல்வி அமைச்சராக தெரிவானார்.
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் அமரர் பெ. சந்திரசேகரனின் மறைவையடுத்து பாராளுமன்றத்திலும் ஒரு மாதம் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
அதன் பின் மலையக மக்கள் முன்னணியிலிருந்து விலகி திகாம்பரத்துடன் இணைந்து தொழிலாளர் விடுதலை முன்னணி என்ற தொழிற்சங்கத்தை ஆரம்பித்தனர்.
அதன் பின் இருவரும் பிரிந்து திகாம்பரம் தொழிலார் தேசிய சங்கத்தை பொறுப்பேற்ற பின்பு அருள்சாமி மீண்டும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து உப தலைவராக கடமையாற்றி வந்துள்ளார். அவர் அன்மையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காலத்தில் பெருந்தோட்ட அபிவிருத்தி பொறுப்பு நிதியத்தின் (டிரஸ்ட்) இயக்குனர் சபை தலைவராகவும் கடமையாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.