இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் உள்ளிட்டோர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் இன்று அதிகாலை 3.27 மணிக்கு புளோரிடா கடலில் இவர்கள் தரையிறங்கினர்.
இவர்கள் இருவருடன் அமெரிக்கா, ரஷ்யாவைச் சேர்ந்த மேலும் இரு விண்வெளி வீரர்களும் பூமி திரும்பினர்.
இவர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள மக்கள் பிரார்த்தனை செய்த வண்ணம் இருந்தனர்.
விண்கலம் தரையிறங்கும் காட்சியை நாசா, ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனங்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன.
முன்னதாக, அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார்லைனர் என்ற புதிய விண்கலத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் கடந்த ஆண்டு ஜூன் 5 ஆம் திகதி ஐஎஸ்எஸ் நிலையத்துக்கு சென்றனர்.
இவர்கள் 8 நாட்கள் ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருவரும் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் திகதி ஸ்டார்லைனர் விண்கலம் ஆட்கள் இன்றி பூமிக்கு திரும்பியது.
இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 28 ஆம் திகதி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் அமெரிக்காவின் நிக் ஹேக், ரஷ்யாவின் அலெக்சாண்டர் ஆகிய இரு வீரர்களுடன் ஐஎஸ்எஸ் நிலையம் சென்றது.
கடந்த 16 ஆம் திகதி அமெரிக்காவை சேர்ந்த ஆனி மெக்லைன், நிகோல் அயர்ஸ், ஜப்பானை சேர்ந்த டகுயா ஒனிஷி, ரஷ்யாவை சேர்ந்த கிரிஸ் பெஸ்கோஸ் ஆகியோர் டிராகன் விண்கலத்தில் ஐஎஸ்எஸ் நிலையம் சென்றனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 7 வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு செய்தனர்.
புதிய வீரர்கள் ஐஎஸ்எஸ் நிலையம் வந்த பிறகு அவர்களிடம் பணிகளை ஒப்படைத்துவிட்டு பழைய வீரர்கள் பூமிக்கு திரும்புவது வழக்கம். இதற்கு 5 நாட்கள் வரை ஆகும். ஆனால் இந்த முறை 2 நாட்களிலேயே பழைய விண்வெளி வீரர்கள் நேற்று பூமிக்கு புறப்பட்டனர்.
இதன்படி அமெரிக்காவை சேர்ந்த நிக் ஹேக், சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர், ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர் டிராகன் 9 விண்கலத்தில் நேற்று காலை 10.35 மணிக்கு பூமிக்கு புறப்பட்டனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 17 மணி நேர பயணத்துக்குப் பிறகு இன்று அதிகாலை 3.27 மணி அளவில் அமெரிக்காவின் புளாரிடா கடல் பகுதியில் டிராகன் விண்கலம் வந்து சேர்ந்தது.