தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் இலங்கையில் 85% குடும்பங்களுக்கு நீர் விநியோகம் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் நீர்த்தேவையில் சுமார் 62 வீதம் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (01) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
“தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் இலங்கையில் 85% குடும்பங்களுக்கு நீர் விநியோகம் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தேவையில் 62% ஐ பூர்த்தி செய்ய முடிந்துள்ளது.
கொவிட் 19 நோய்த்தொற்று மற்றும் உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்நாடு எதிர்கொண்ட பொருளாதார பின்னடைவினால், நாம் முதலில் தயாரித்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் நிலை காணப்பட்டது.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த வேலைத்திட்டங்களின் மூலம் நாடு மீண்டும் பொருளாதார ஸ்திரநிலையை அடைந்து வருவதன் காரணமாக, படிப்படியாக அந்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடிந்துள்ளது.அந்த வகையில், தற்போது நாட்டின் குடிநீர்த் தேவையில் 62 வீத தேவையை பூர்த்திசெய்துள்ளோம்.
பல பிரதேசங்களில் மக்கள் நீர் வழங்கல் அமைச்சினால் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீருக்குப் பதிலாக பல்வேறு மாற்று குடிநீர் மூலங்கள் ஊடாக தமது குடிநீர்த் தேவையை நிவர்த்தி செய்துகொள்வதன் காரணமாக நாட்டின் மொத்த குடிநீர்த் தேவையில் 85 வீதத்தை நாம் நிறைவு செய்தால் நாட்டின் குடிநீர் தேவையை முழுமையாக நிவர்த்தி செய்ய முடியும்.
மேலும், கடந்த காலங்களில் தேசிய நீர் வழங்கல் அமைச்சு என்ற வகையில், கிராமங்களுக்கே சென்று மக்களின் குடிநீர்த் தேவை தொடர்பில் ஆராய்ந்து பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலமே இந்த 62 வீத அடைவை எட்ட முடிந்தது. அதற்காக சபையின் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை செயற்பட முடியாத கஷ்டப் பிரதேசங்களிலும் மற்றும் மலையகத்தின் பல்வேறு இடங்களிலும், அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம் மூலம் அப்பிரதேச மக்களுக்கு அவசியமான குடிநீரை வழங்க பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அதில் பெரும்பாலானவைகளின் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்காக துரித, இடைக்கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் நனோ தொழில்நுட்ப நீர் சுத்திகரிப்பு முறைமைகளை நிறுவும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அவற்றில் பெரும்பாலானவைகளின் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. சிறுநீரக நோயாளிகள் அதிகமாக உள்ள பிரதேசங்களுக்காக இந்த நனோ தொழில்நுட்ப நீர் சுத்திகரிப்பு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
WASSIP என்ற திட்டத்தின் கீழ் நீர் வழங்கல் சபை மற்றும் சமூக நீர் வழங்கல் திணைக்களம் ஆகிய இரண்டிற்கும் நீர் வழங்க முடியாத பிரதேசங்களுக்கு நீர் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இது தற்போது கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் செயற்படுத்தப்படுவதாகவும், கடல் சீற்றம் போன்ற பல்வேறு காரணங்களினால் ஆறுகளில் உப்பு நீர் கலப்பதைத் தவிர்க்க தடுப்புகள் அமைக்கும் பணிகளும் பல்வேறு ஆறுகளை அண்டிய பகுதிகளில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.