நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் விசேட டெங்கு ஒழிப்பு வாரத்தின் கடந்த மூன்று நாட்களில்,நுளம்பு பெருகும் அபாயத்துடன் 121 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
எட்டு மாவட்டங்களில் உள்ள அதிக ஆபத்துள்ள சுகாதார மருத்துவ அதிகார பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் ஆலோசகர் வைத்தியர் அனோஜா தீரசிங்க குறிப்பிட்டார்.
இதற்கமைய 229 பாடசாலைகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், 29 பாடசாலைகளில் நுளம்பு பரவும் நிலை ஏற்கனவே உள்ளதாகவும் அடையாளம் காணப்பட்டது.
இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்பதால், பாடசாலை நிர்வாகிகளும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் நுளம்பு பெருக்கத்தைத் தடுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தின் ஆறாவது நாளான ஜூலை 5 ஆம் திகதி 19,774 வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மொத்தம் 5,085 வளாகங்கள் நுளம்புகள் பெருகும் இடங்களாக அடையாளம் காணப்பட்டதாகவும், 567 வளாகங்களில் நுளம்பு பெருகி இருப்பது கண்டறியப்பட்டதாகவும் வைத்தியர் தீரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.