நுவரெலியாவில் ஆசிரியர்கள் போராட்டம்….

0
152

நுவரெலியாவில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் நேற்று (21.06.2022) நுவரெலியா ஹாவாஎலிய பெண்கள் உயர்நிலை பாடசாலைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்கள் எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தை சுமார் ஒரு மணித்தியாலயம் முன்னெடுத்தனர்.

விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் கடந்த 5 நாட்களாக எரிபொருள் இன்மையால் பாரிய சிரமத்தின் மத்தியிலேயே பணியில் ஈடுபடுவதாகவும், தமக்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கான அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ள நிலையிலும் எரிபொருளை முறையாக பெற்றுக்கொள்வதில் ஆசிரியர்கள் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஆசிரியர்களுக்கான போக்குவரத்து கொடுப்பனவுகள் அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த மதீப்பீட்டுப் பணிகளுக்காக வருகை தரும் ஆசிரியர்கள் எரிபொருள் இன்றி பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதால் தமக்கு சாதகமான பதில் கிடைக்க வேண்டும் என கோரியே போராட்டத்தை முன்னெடுத்ததாக போராட்டகாரர்கள் குறிப்பிட்டனர்.

இலங்கையில் கொரோனா அதனைத்தொடர்ந்து பொருளாதார நெருக்கடி என்று மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், க.பொ.த சாதாரன தர மாணவர்களின் எதிர்காலத்தையும் இதன்மூலம் கேள்விக்கு உட்படுத்த வேண்டாம் எனவும் ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டனர்.

மேற்படி, பரீட்சை வினாதாள் மதிப்பீட்டு பணிகளுக்காக வருகை தரும் ஆரிசியர்களுக்கு உடனடியாக எரிபொருள் வழங்க சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கவனயீர்ப்பில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டனர்.

மேற்படி பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக அதிகமான ஆசிரியர்கள் கடமைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மதிப்பீட்டுப் பணிகளுக்காக நுவரெலியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இருந்து வருகை தரும் ஆசிரியர்கள் எரிபொருள் நெருக்கடிக்கு முகம்கொடுத்து வருவதாகவும், எரிபொருள் இன்றி, அதிக பணத்தை செலவழித்து முச்சக்கர வண்டி மூலம் கடமைக்கு வருகை தருவதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு க.பொ.த சாதாரண தரப்பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தாமதமானால் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகுவதும் தாமதமாகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

க.கிஷாந்தன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here