கொவிட் – 19 தடுப்பூசி திட்டத்தில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அல்லாவிடின் கொரோனா உப கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம் இருக்கின்றது – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.அத்துடன், இலங்கையில் இரசாயன உரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் சீனா இருக்கின்றதா என்ற சந்தேகம் தமக்கு எழுவதாகவும் அவர் கூறினார்.
கொவிட் 19 விவகாரம் மற்றும் இரசாயன உரபயன்பாட்டுக்கான தடை என்பன தொடர்பில் இன்று (30) நுவரெலியாவில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவை குறித்து அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. தொற்றாளர்களுக்கு சிகிச்சைப்பெறுவதற்கு வைத்தியசாலைகளில் கட்டில்கள் இல்லை. வெளிமாவட்டங்களுக்கு அவர்களை கொண்டுசெல்லும் நிலைமை காணப்படுகின்றது.
நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா பரவலுக்கு ஆடைத்தொழிற்சாலைகளும் பிரதான காரணமாக அமைகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலைகளுக்கு கிராமம் மற்றும் தோட்டப்புறங்களில் இருந்து ஊழியர்கள் வருகின்றனர். அனைவரும் ஒரு இடத்தில் இருந்து வருவதில்லை. வெவ்வேறான பகுதிகளில் இருந்தே வருகின்றனர். எனவே, ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதன்மூலம் பலருக்கு ஏற்படக்கூடிய அபாயமும், உப கொத்தணி உருவாகக்கூடிய சூழ்நிலையும் காணப்படுகின்றது.
எனவே, ஆடைத்தொழிற்சாலைகளை மூடுவதற்கு அல்லது அத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இது தொடர்பில் மாவட்டத்துக்கு பொறுப்புக்கூறவேண்டிய அரச இயந்திரம் முழு கவனமும் செலுத்த வேண்டும்.
அதேபோல பெருந்தோட்டத் தொழிலாளர்களும் தமது பணிகளை முன்னெடுத்துவருகின்றனர். நெருக்கடியான காலகட்டத்திலும் அவர்கள் உழைக்கின்றனர். நாட்டு பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்குகின்றனர். எனவே, அவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றப்படவேண்டும். அதற்காக திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
அதேவேளை, நாட்டில் இரசாயன உரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எதிர்காலத்தில் நன்மை பயக்கக்கூடும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இரசாயன உர பயன்பாட்டுக்கு படிமுறை ரீதியாக தடை விதித்திருக்கலாம். அதனைவிடுத்து அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு தவறானதாகும்.
இரசாயன உரத்துக்கு மண் பழக்கப்பட்டுவிட்டது. ஹைபிரிட் வதைகள், இரசாயன உரம் இல்லாவிட்டால் சிறந்த விளைச்சலை வழங்காது. எனவே, அரசு தவறான முடிவை எடுத்துள்ளது. சீனா போன்ற நாடுகளில் செயற்கை பயிர்செய்கை இடம்பெறுகின்றது. எனவே, இரசாயன உரத்துக்கான தடையின் பின்னணியில் சீனா இருக்கின்றது என்ற சந்தேகமும் எழுகின்றது.’ – என்றார்.
(க.கிஷாந்தன்)