வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், வனப்பாதுகாப்பு திணைக்களம், விசேட அதிரடிப் படையினர் பிரிவு இணைந்து 21.08.2018 அன்று இரவு நுவரெலியா, மீபிலிமான, எல்க்ப்ளேன்ஸ் பிரதேசங்களில் நடத்திய சோதனை நடவடிக்கையின்போது மிருகங்களை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் தோட்டா துப்பாக்கி ஒன்றும், பெருந்தொகையான தோட்டா மற்றும் வெற்றுத் தோட்டாக்கள் மற்றும் தோட்டாக்களை நிரப்புகின்ற மூலப்பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட அனுமதிப் பத்திரமற்ற 12 தோட்டாக்களைக் கொண்ட துப்பாக்கி, 82 தோட்டக்கள், தோட்டாக்களை நிரப்புகின்ற பெருந்தொகையான மூலப்பொருட்கள், ரி.-56 ரக தோட்டாக்கள் 08, மேலும் பல வெற்றுத்தோட்டாக்கள், வெடிப்பொருள், மாட்டுக் கொம்புகள் 03, வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படுகின்ற ஆடைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மீபிலிமான எல்க்ப்ளேன்ஸ் பகுதியைச் சேர்ந்த ஓபிரே பர்டினன்ஸ் (வயது – 36), எட்வட் கெலரன்ஸ் பர்டினன்ட்ஸ் (வயது – 38), ரேல்ஸ் ஷெடல் (வயது – 52) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 23.08.2018 அன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
ஹோர்டன்தென்ன பகுதியை அண்மித்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக வேட்டைகளில் சிலர் ஈடுபட்டு வருவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நீண்டகாலமாக மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் இந்த சந்தேக நபர்கள் தேடுதலின்போது கைது செய்யப்பட்டனர்.
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கெல்வேஸ்லேன்ட் பூங்காவின் பொறுப்பாளரான வனப்பாதுகாப்பு அதிகாரி எம்.ஜி. விமலரத்ன பண்டா, பாதுகாப்பு உதவி அதிகாரி வை.எம்.கே.ஜி. அத்துல யாப்பாரத்ன, வனப்பாதுகாப்பு ஒழுங்கு அதிகாரி சுரங்க ஜயசேகர, உதவி அதிகாரி திலின மதுவத்த, சாரதி சி.எம். இலுக்கும்புர, விசேட அதிரடிப் படையின் பொ.ப.கொடிதுவக்கு, உ.பொ.ப.ரணதுங்க, பொ.சே. 8222 லங்காதிகார, பொ.செ.18221 ரணசிங்க, மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் வனத்துறை உதவி அதிகாரி எம்.பி.கே. டி சொய்ஸா ஆகியோர் இந்த தேடுதலில் ஈடுபட்டிருந்தவர்களாவர்.
(க.கிஷாந்தன்)