நுவரெலியா, கிரகரி வாவியில் விபத்திற்குள்ளான நீர் விமானம் பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் இரண்டாவது நாளான நேற்று (09) மாலை 6 மணியளவில் மீட்டெடுக்கப்பட்டது.
இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான அதி உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய பாரந்தூக்கி வாகனங்கள் மூலம் கரைக்கு இழுத்து தூக்கி எடுக்கப்பட்டது.
எனினும் மீட்பு பணியின்போதும் விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்திலும் குறித்த விமானம் கடுமையாக சேதம் ஏற்பட்டுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனையின் பின்னர் நுவரெலியா பொலிஸ் உயிர் காப்பாளர்கள், விமானப்படை அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் கிரகரி வாவி படகு சவாரி வீரர்கள் ஆகியோர் இணைந்து வாவியில் விபத்திற்குள்ளான விமானத்தை பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் மீட்டனர்.
நுவரெலியாவில் தற்போது நிலவிவரும் பனி மற்றும் மோசமான வானிலை காரணமாகவும் , கிரகரி வாவியில் சேறும் சகதியும் தேங்கியுள்ளதால் மீட்பு பணியை மேற்கொள்வதில் நேற்று முன்தினம் (08) சற்று தாமதம் ஏற்பட்டிருந்தது.
விமானம் விபத்திற்குள்ளானதற்கான உரிய காரணம் இதுவரை தெரிய வரவில்லை இதுபற்றி விசாரணை செய்வதற்கு தனிப்பட்ட குழு ஒன்று நியமனம் செய்யப்பட்டுள்ளது.
நுவரெலியா, கிரகரி வாவியில் நீர் விமானம் ஒன்று (07) ஆம் திகதி பிற்பகல் 12.30 மணியளவில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அதிலிருந்த 2 விமானிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை ஏற்றிச் செல்வதற்காக கட்டுநாயக்க பண்டார நாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வந்தபோதே விமானம் வேகமாக தரையிறங்கும் போதோ விமானிகளின் கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளையும், ஏரியில் படகு சவாரி செய்துகொண்டிருந்தவர்கள் உடனடியாக மீட்டுள்ளனர்.




