நுவரெலியா, மற்றும் இராகலை நகரில் இயங்கும் சதொச மொத்த விற்பனை நிலையங்களில் சீனியை மாத்திரம் கொள்வனவு செய்ய குறித்த பிரதேசங்களில் காணப்படும் தோட்டங்கள் மற்றும் கிராமபுறங்ககளிலிருந்து அனேகமானோர் (02) வியாழக்கிழமை காலை நகரங்களுக்கு வருகை தந்திருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.
இதன் போது குறித்த சதொச மொத்த விற்பனை நிலையங்களில் சீனியை பெற்று செல்ல வந்த நுகர்வோர்களுக்கு தலா ஒரு கிலோ கிராம் சீனி மாத்திரம் 130/= ரூபாய் என்ற விலையடிப்படையில் வழங்கப்பட்டது.
மேலும் அரிசி 96/= ரூபாய்க்கும், பருப்பு கிலோ 245/= ரூபாவுக்கும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நுவரெலியா லோசன் வீதியில் அமைந்துள்ள சதொச மொத்த விற்பணை நிலையத்தில் நேற்று முன் தினம் முதலாம் திகதி காலை முதல் சீனிக்கு தட்டுப்பாடு நிலவியதுடன் (02) வியாழக்கிழமை மதியம் வரை இந்த தட்டுபாடு நிலை தொடர்ந்திருந்தது.
இதனால் நுவரெலியா பிரதேசங்களில் இருந்து சதொச நிலையத்திற்கு சீனி வாங்குவதற்கு சென்றோர் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
இது தொடர்பில் நுவரெலியா சதொச மொத்த விற்பனை நிலைய முகாமையாளரிடம் வினவியப்போது தற்போது விற்பனைக்காக சீனி இல்லை இருப்பினும் (03) வெள்ளிக்கிழமை சீனி கிடைக்கும் என தெரிவித்தார்.
டி.சந்ரு