நானுஓயா நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்பப்பிரிவு வைத்தியசாலைக்கான குடிநீர் விநியோகத்தை தடை செய்த நுவரெலியா பிரதேச சபை தலைவருக்கு எதிராக மத்திய மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் வேலு சிவானந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
பிரதேச சபைத் தலைவர்கள் பிரதேச மக்களின் நன்மை கருதி செயற்பட வேண்டும். ஆனால் நுவரெலியா பிரதேச சபை தலைவர் வைத்தியசாலை திறப்பு விழாவிற்கு தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதை காரணம் காட்டி வைத்தியசாலைக்கான குடிநீரைத் தடை செய்துள்ளமை தான்தோன்றித்தனமான செயலாகும். இன்றைய கொரோனா பரவல் காலகட்டத்தில் வைத்தியசாலையும் வைத்திய சேவையும் மிக மிக முக்கியமானதாகும்.
இவ்வாறானதொரு நிலையில் வைத்தியசாலைக்கான குடிநீர் விநியோகத்தை தடை செய்தமையானது மன்னிக்க முடியாத செயலாகும்.
எனவே இச் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பிரதேச சபை தலைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாகாண ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.