நுவரெலியாவில் கேல்வெஸ் தேசிய பூங்காவிற்கு அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதனால் தாம் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக பிரதேவாசிகள் தெரிவிக்கின்றனர்.அண்மைக்காலமாக இப்பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாகவும், சமீபத்தில் குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டீ.வீ கெமராவில் கூட சிறுத்தைகள் நடமாடும் காட்சியும் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, நுவரெலியா வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளுக்கு பிரதேசவாசிகள் தெரியப்படுத்தியுள்ளனர்.
அவ்விடத்திற்கு வந்த நுவரெலியா வனவிலங்கு அதிகாரி சந்தன சூரிய பண்டார தலைமையிலான குழுவினர் சிறுத்தை நடமாடியதற்கான கால் தடங்களை அவதானித்ததுடன், சிறுத்தையை பிடிப்பதற்காக விசேட திட்டம் ஒன்றையும் மேற்கொண்டார்.
அந்த அடிப்படையில், இரும்பிலான கூடு ஒன்றினை கொண்டு வந்து சிறுத்தை நடமாடுவதாக கூறப்படும் குறித்த பகுதியில் சிறுத்தையை பிடிப்பதற்காக வைத்துள்ளார்.
குறித்த சிறுத்தை பிதுருதாலகால மலை, ஹக்கல அல்லது சீதாஎலிய ஆகிய காட்டுப்பகுதியிலிருந்து இப்பகுதியை நோக்கி வந்திருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மேலும், இரவு வேளைகளில் வரும் சிறுத்தைகள் வளர்ப்பு பிராணிகளை இழுத்துச் செல்வதாகவும், மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இலங்கைகே உரித்தான சிறுவகைப் புலி இனமான மேற்படி சிறுத்தைகள் அழிவது அல்லது அழிக்கப்படுவது பாரிய சவாலாக மாறி வருவதாகவும் இவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவை அதிகளவில் மலையகப் பகுதிகளில் மட்டும் நடமாடுவது குறிப்பிடத்தக்கதாகும்.
(க.கிஷாந்தன்)