நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துப்படுத்துவதற்காக மாவட்டத்தில் உள்ள 13 பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் 20 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் டோஸ் 7 லட்சத்து 80 ஆயிரம் தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் நந்தன கலபொட தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் சைனோபார்ம் தடுப்பூசிகள் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. பெரும்பாலான சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 30 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு சைனோபார்ம் முதலாம் இரண்டாம் டோஸ் தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ளன.
தற்போது 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய இன்றைய தினமும் (24) திகயும் பல சுகாதார பிரிவுகளில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அம்பகமுவ பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட ஹட்டன் வடக்கு, கிழக்கு, தெற்கு மேற்கு கிராம சேவகர் பிரிவுகளில் உள்ளவர்களுக்கும், டிக்கோயா, மேல் கீழ் பிரிவு தரவலை மேல் கீழ் பிரிவு பூல் பேங்க் பிரிவு தரவலை கொலனி உள்ளிட்ட கிராம சேவகர் பிரிவுகளில் நிரந்தர வசிப்பிடமாக கொண்டவர்களுக்கு சைனோபார்ம் முதலாம் டோஸ் தடுப்பூசிகள் இன்று (24) திகதி ஹட்டன் டி.கே.டப்ளியு கலாசார மண்டபத்தில் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
இதன் போது 20 இற்கும் 29 இற்கும் இடைப்பட்ட அதிகமான இளைஞர் யுவதிகள் சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை நின்று கொட்டும் மழையினையும் பொருப்படுத்தாது தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டனர்.
இதன் போது 2891 பேருக்கு தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்த போதிலும் அதற்கும் அதிகமானவர்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வருகை தந்திருந்தனர்.
இவர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர். குறித்த தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைக்கு வைத்தியர்கள் பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகஸ்த்தர்கள், பாதுகாப்பு பிரிவினர், ஹட்டன் டிக்கோயா நகர சபை சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் ஒத்துழைப்பு நல்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கே.சுந்தரலிங்கம்