நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை, ஹங்குராங்கெத்த, வலப்பனை ஆகிய பிரதேசங்களில் (28) இரவு முதல் இடைவிடாது பெய்து வரும் பலத்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் கந்தப்பளையில் அதிக மழை பெய்து வருவதுடன் தாழ் நில பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால் பல ஏக்கர் விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.அத்தோடு, பெய்த கடும் மழை காரணமாக உடப்புசல்லாவ – நுவரெலியா ஊடான போக்குவரத்து தடைப்பட்டது.
அத்துடன், கந்தப்பளை கோர்ட்லோட்ஜ் சந்தியில் பிரதான வீதிக்கு மேலாக வெள்ளநீர் போவதினால் போக்குவரத்து தடைப்பட்டதுடன் சில வீதிகள் சேதமடைந்துள்ளது. சில பிரதான வீதி பகுதிகளில் முற்றாக வெள்ளம் சூழ்ந்துள்ளதனால் வீதி அருகில் உள்ள வடிகான்களை அவதானிக்க முடியாத நிலையில் மக்கள் விபத்தினை எதிர்கொள்ளும் நிலையும் உருவாகியுள்ளது.
குறிப்பாக உடப்புசல்லாவ , இராகலை , கந்தப்பளை நகரில் இருந்து நுவரெலியாவிற்கு செல்லும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏனைய அரச திணைக்களங்களுக்கு அன்றாடம் தங்களின் சேவையினை பெறச் செல்லும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன், நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கந்தபளை பகுதிகளில் சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் .
மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததன் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு இந்த விவசாய காணிகள் மூழ்குவதற்கு முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.வலப்பனை பிரதேசத்தில் இராகலை புரூக்சைட் மற்றும் சில்வர்கண்டி தோட்டத்தில் வேருடன் பாரிய மரம் சாய்ந்து புரூக்சைட் சந்தி ஊடாக கோணப்பிட்டிய மற்றும் ஹைபொரஸ்ட் வரை செல்லும் பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில்வர்கண்டி தோட்டத்தில் ஊற்று நீர் உள்ள பகுதியில் பாரிய மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மண்ணை அகற்றி போக்குவரத்தை மேற்கொள்ள பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
வலப்பனை நில்தண்டாஹீன வெளிஹின்ன துங்கலஹேன பகுதியில் பாரிய கற்களுடன், மண்மேடு ஒன்று சரிந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக நில்தண்டாஹீன பொலிஸார் தெரிவித்தனர்.
ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மண்மேடு சரிந்து பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மண்ணை அகற்றும் பணிகள் முன்னெடுக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக ஹங்குராங்கெத்த பொலிஸார் தெரிவித்தனர்.உடபுஸ்ஸலாவ சென் மாக்றட் குடியிருப்பு ஒன்றின் பின் பகுதியில் மண்மேடு சரிவு ஏற்பட்டுள்ளதாக உடப்புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், மத்துரட்ட பொலிஸ் பகுதியின் பிரதான வீதியில் மரம் ஒன்று சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சரிந்த மரத்தை அகற்றும் பணி பிரதேச மக்களின் உதவியுடன் மேற்கொண்டு வருவதாக மத்துரட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் 28.12.2023 அன்று காலை முதல் ஒரு வான்கதவு திறக்கப்பட்டுள்ளது.
அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.அத்தோடு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறந்து விடப்பட்டதன் காரணமாக சென்.கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதோடு, டெவோன் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிட்டதக்கது.
(க.கிஷாந்தன்)