கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாழ்வாதாரத்தினை இழந்து வாழ்வதற்கு வழியின்றி தற்போது வீட்டில் முடங்கி உள்ள மக்களின் வாழ்க்கையினை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் நுவரெலியா மாவட்டத்தில் 405 கிராம சேவகர் பிரிவுகளில் இன்று (02) திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ கோரளை,ஹங்குராங்கெத்த,வலப்பனை,கொத்மலை,நுவரெலியா உள்ளிட்ட பிரதேச செயலகங்களுக்குட்பட்ட சுமார் 35 சமூர்த்தி வலயங்களில் குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள குறித்த திட்டத்திற்கு கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள் உதவி வருகின்றனர்.
இதன் போது சமூர்த்தி உதவி பெறுவோர், முதியோர் கொடுப்பனவுகள் பெறுவோர்,விசேட தேவையுடையோர் உட்பட பலருக்கு குறித்த கொடுப்பனவுகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு புறம்பாக தற்போது சமூர்த்தி கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் பெறுவதற்கு பெயர் பட்டியலில் உள்ளவர்களுக்கு இக்கொடுப்பனவுகள் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கே.சுந்தரலிங்கம்