நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் காணப்படும் பிசிஆர் இயந்திரம் பழுதடைந்துள்ளதால் பரிசோதனை அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதில் தாமத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா, கொத்மலை, ஹங்குராங்கெத்த மற்றும் அம்பகமுவ பிரதேசங்களில், கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதணைகளுக்கான அறிக்கைகள் கிடைக்கப்பெறவில்லை என்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்கிகள், தனியார் நிறுவனங்கள், பெருந்தோட்ட பகுதி மக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் அறிக்கைகளும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்று பொதுசுகாதார பரிசோதர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, 24 மணித்தியாலங்களும் பிசிஆர் இயந்திரன் பயன்பாடு தொடர்வதால். பிசிஆர் இயந்திரம் பழுதடைந்துள்ளது என்றும் அதனை சரிசெய்யும் நடவடிக்கைகள் நேற்று (6) முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
மேற்படி வைத்தியசாலையில் ஒரு பிசிஆர் இயந்திரமே காணப்படுவதாகவும் மேலும் ஓர் இயந்திரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
டி சந்ரு