நுவரெலியா மாவட்டத்தில் கஸ்ட பிரதேச பெருந்தோட்டப்பகுதி தமிழ் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு சுகாதார பயிற்சிகளை அவுஸ்திரேலியா (DAYS FOR GIRLS) டேய்ஸ் போர் கேல்ஸ் என்ற அமைப்பு முன்னெடுத்து வருகின்றது.
இந்த அமைப்பு சுகாதாரப் பயிற்சியுடன் மாணவிகளின் மாதவிடாய் காலப்பகுதியில் சுயமாக தமது சுகாதார நடவடிக்கைகளையும், அதன் போது பாவிக்ககூடிய ஆடைகளையும் தாமே தயாரித்துக் கொள்ளும் வகையில் இந்த பயிற்சி வழங்கப்படுகின்றது.
இதன் முதற்கட்ட பயிற்சி அக்கரப்பத்தனை கிலாஸ்கோ தமிழ் பாடசாலையில் பாடசாலை அதிபர் ப.சிவலிங்கம் தலைமயில் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டதாக இந்த பயிற்சி திட்டத்தை அறிமுகம் செய்துள்ள அவுஸ்திரேலியா பிரஜையான வல்லவன் பிள்ளை சத்தியவான் தெரிவித்தார்.
அதேவேளை முதற்கட்டமான பயிற்சியை வழங்குவதற்காக அவுஸ்திரேலியா நாட்டிலிருந்து குறித்த அமைப்பின் உறுப்பினர்களான ஹரின் ஹொன்ட் , பான் போல்ஸ் ,ரோஸ் மிகன் ஆகிய மூவர் அடங்கிய குழுவினர் இப்பாடசாலைக்கு வருகை தந்து மாணவிகளுக்கான பயிற்சியினை வழங்கினர்.
இதனையடுத்து மாணவிகள் ஆடைகளை தைத்து கொள்வதற்கான தையல் இயந்திரங்கள் அச்சு இயந்திரம் மற்றும் ஆடைகள் என மூன்று லட்சம் பெறுமதியான உபகரணங்களையும் பாடசாலை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாகவும் இலவசமாகவும் வழங்கி வைத்தனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த வல்லவன் பிள்ளை சத்தியவான் தெரிவித்ததாவது.
மலையக பிரதேச தோட்டப்பகுதியில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் வறுமை பிரதேசமாகவும் கஸ்ட பிரதேசமாகவும் காணப்படும் பெருந்தோட்ட பாடசாலைகள் பல உண்டு. இவ்வாறான பாடசாலைகளில் கல்வி பயிலும் வயது வந்த மாணவிகள் அவர்களின் மாதவிடாய்காலப்பகுதியில் மேற்கொள்ளப்படும் சுகாதார பிரச்சிணைகளில் ஏற்படும் பாதிப்புகளுக்காக தீர்வு காணும் முகமாக இந்த பயிற்சி முதன் முறையாக அறிமுகம் செய்யப்படுத்தப்படுகின்றது.
இந்த பயிற்சி கஸ்ட பிரதேச பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகளை மாணவிகளை இலக்காக கொண்டு மேற்கொள்ள அவுஸ்திரேலியாவின் டேய்ஸ் போர் கேல்ஸ்என்ற அமைப்பு முன்வந்துள்ளது. இது வரவேற்க தக்க ஒன்றாகும்.அதேவேளை எதிர்காலத்தில் இப்பயிற்சியின் ஊடாக இம்மாணவிகள் சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுத்து அவர்களின் மாதவிடாய் காலப்பகுதியில் கல்வியை தடையின்றி
முன்னெடுக்க முடியும்.
இதன் முதற்கட்ட பயிற்சியில் மாணவிகளின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் இந்த அமைப்பை சார்ந்தவர்களுக்கு திருப்திகரமாக அமைந்திருந்தது.
எனவே இதன் தொடர்சியான பயிற்சியும் உபகரணங்கள் கையளிப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து எதிர்வரும்
மே மாதம் முதல் நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்படும் கஸ்ட பிரதேச பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் என்றார்.
அத்தோடு தெரிவு செய்யப்படும் பாடசாலைகளில் மாணவிகளுக்கான ஆடைகளை தாரிக்க இந்த அமைபின்
ஊடாக சம்பளம் வழங்கப்பட்டு பெண்கள் தையல் வேலைகளுக்கு உள்வாங்குவதுடன் இவர்களூடாக மாணவிகளுக்கு சுயமாக ஆடைகளை தயாரித்து கொள்ள பயிற்சிகளும் பாடசாலைகளில் முன்னெடுக்க வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அக்கப்பரத்தனை நிருபர்