இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1600 ஐ கடந்துள்ளது.
நாட்டில் மேலும் 42 கொவிட் மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணணக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டில் மொத்தமாக இதுவரையில் பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 1,608 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளரால் உறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் நாட்டில் நேற்றையதினம் 3 கொவிட் மரணங்கள் சம்பவித்துள்ளன.
அத்துடன் மே மாதம் 11 ஆம் திகதி முதல், நேற்று முன்தினம் வரையிலான காலப்பகுதியில் 39 மரணங்கள் இடம்பெற்றுள்ளன.
நேற்று பதிவான மரணங்களில் 17 பெண்களதும் 25 ஆண்களதும் மரணங்கள் உள்ளடங்குகின்றன.
ஹப்புத்தளை, பண்டாரவளை, டிக்கோயா, மன்னார், காத்தான்குடி, காத்தான்குடி-06, கடவத்தை, கொழும்பு, வத்தளை, பொலன்னறுவை, வெயாங்கொடை, மாத்தறை, கட்டுகஸ்தோட்டை, படல்கும்புர, பட்டுகொட, களனி, வத்தேகம, அரநாயக்க, கொச்சிக்கடை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களின் மரணங்களே இவ்வாறு பதிவாகியுள்ளன.
அத்துடன் அக்கரப்பத்தனை, நாரஹேன்பிட்டி, கம்பளை, ஹல்ஓலுவ, நீர்கொழும்பு, கிண்ணியா, கொட்டக்கலை, பொகவந்தலாவ, கலகெடிஹேன, கண்டி, மின்னேரியா உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் பிரகாரம். 30 முதல் 39 வயதுக்கு உட்பட்ட ஒருவரும், 40 முதல் 49 வயதுக்கு உட்பட்ட 03 பேரும் 50 முதல் 59 வயதுக்கு உட்பட்ட 04 பேரும், 60 முதல் 69 வயதுக்கு உட்பட்ட 10 பேரும், 70 – 79 வயதுக்கு உட்பட்ட 16 பேரும், 80 முதல் 89 வயதுக்கு உட்பட்ட 07 பேரும், 90 முதல் 99 வயதுக்கு உட்பட்ட ஒருவரும் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் 08 பேர் வீட்டில் உயிரிழந்ததுடன், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தவர்கள் 31 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது மரணமடைநதுள்ளனர்.
அத்துடன் இந்த மரணங்கள், கொவிட் தொற்றுடன் தீவிர கொவிட்-19 நியூமோனியா, மோசமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டமை. நாட்பட்ட சிறுநீரக நோய், உயர் குருதியழுத்தம். நீரிழிவு, கொவிட்-18 நுரையீரல் தொற்று, மோசமான சுவாச கோளாறு, குருதி நஞ்சானமை ஆகியவற்றால் சம்பவித்துள்ளன.